• October 8, 2025
  • NewsEditor
  • 0

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள திரைப்படம், ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘காந்தாரா’ படத்தின் ப்ரீகுவலாக உருவாகியுள்ள இதில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா, சம்பத் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 2-ம் தேதி வெளியான இந்தப் படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், காந்தாரா திரைப்படத்துக்கு வரும் ரசிகர்களில் சிலர் தெய்வா உடையில் வருகின்றனர்.

அதனால் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. சிலர் ரசிகர்களின் உணர்வைப் பாராட்டுகிறார்கள். சிலர் அதை தெய்வாவுக்குச் செய்யும் அவமரியாதையாகக் கருதுகிறார்கள்.

Kantara Chapter 1 daiva

இந்த நிலையில், ‘கந்தாரா அத்தியாயம் 1’ தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ‘தெய்வா’ கதாபாத்திரங்களைப் போல உடை அணிவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “’காந்தாரா அத்தியாயம் 1′ திரைப்படமும் அதன் முதல் பாகமும் ‘தெய்வங்களின்’ மகிமையை மரியாதையுடன் சித்தரித்து கொண்டாடும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

இந்தப் படத்துக்கு ரசிகர்களின் அமோக வரவேற்புக்கும், அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றி.

ஒரு சமூக மக்களின் நம்பிக்கைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சில நபர்கள் திரைப்படத்தின் தெய்வக் கதாபாத்திரங்களைப் பின்பற்றி பொது இடங்களிலும் கூட்டங்களிலும் தகாத நடத்தையில் ஈடுபடுவதை நாங்கள் கவனித்துள்ளோம்.

எனவே, நடிப்பு அல்லது மிமிக்ரிக்காக இந்தக் கதாபாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாம். இத்தகைய செயல்கள் நமது நம்பிக்கை முறையை அற்பமாக்குவதும், அது சார்ந்த சமூகத்தின் மத உணர்வுகளையும் நம்பிக்கையையும் ஆழமாகப் புண்படுத்துவதும் ஆகும்.

ஆதலால் , திரையரங்குகளிலோ அல்லது பொது இடங்களிலோ தெய்வா ஆளுமைகளைப் பின்பற்றுதல், பிரதிபலித்தல் அல்லது அற்பமாக்குதல் போன்ற எந்தவொரு செயலிலிருந்தும் விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நேர்மையான வேண்டுகோளை விடுக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *