• October 8, 2025
  • NewsEditor
  • 0

ஒருவருக்கு  தாழ்வு மனப்பான்மை இருந்தால் அவர் ‘வாட்டர் மெலன்’ ஸ்டாரைப் பார்த்து முன்னுதாரணமாகக் கொள்ளலாம். தன்னை நடிப்பு அரக்கன் என்று தீவிரமாக நம்புவதோடு எத்தனை போ் சுற்றி நின்று அடித்தாலும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே போராடும் அந்தப் போராளியின் வாழ்க்கை ஒரு வீர வரலாறாக நிச்சயம் எழுதப்பட வேண்டும். 

BB Tamil 9 Day 2

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 2

சுபிக்ஷா, ரம்யா, அரோரா ஆகிய மூவரும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்போல. “நாம தினமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி தூக்கணும்’ என்று சுபிக்ஷா ஆவேசமாகச் சொல்ல அதை ஆமோதித்துக் கொண்டிருந்தார் ரம்யா. இவர்களின் இப்போதைய டார்கெட் பார்வதி போலிருக்கிறது. (அந்த லேடி திவாகரை சொரண்டிப் பார்க்காதீங்கம்மா! பிரச்சினையாயிடும்!) 

“நான் காலைல அஞ்சுமணிக்கே எழுந்துட்டேன். ஒரு டீக்கு தேவுடு காக்க வேண்டியிருக்கு” என்று பிரவீன்காந்தி அனத்த “எங்களுக்கு கிடைச்ச பவரை வெச்சு நாங்க தூங்கறோம்… உங்களுக்கு என்ன இப்ப?” என்று சூப்பர் டீலக்ஸ் வீடு பந்தா காட்ட “அப்புறம் நான் வெளிநடப்பு செஞ்சுடுவேன். என் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது” என்று இயக்குநர் மிரட்ட “சரி.. வயசான ஆளு.. சுகர்ல ஏதாவது ஆயிடப் போகுது” என்று மனமிரங்கி வலது காலை எடுத்து வைத்து வெளியே வந்தார்கள். 

‘மாஸூ மரணம்’ என்கிற பாடாவதியான வேக் அப் பாடலுக்குப் பிறகு தண்ணீர் பிரச்சினை மீண்டும் ஆரம்பித்தது. ‘எட்டு எட்டா மனுச வாழ்க்கை பிரிச்சுக்கோ” என்று பாட்சா பாடி வைத்தாலும் இவர்கள் தண்ணீரை ஆளுக்கு எட்டு லிட்டராக பிரித்து வைத்திருக்கிறார்கள் போல. “என்னோட பங்கு எட்டு லிட்டர் எங்க. இப்பவே கொடுத்துடுங்க.. மத்தவங்க எக்கேடு கெட்டா எனக்கென்ன?” என்கிற மாதிரி தன் பங்கு தண்ணீரைக் கேட்டு ரம்யா எகிற ‘வாட்டர் மேனேஜ்மெண்ட்’ டீமில் இருந்த சபரியும் கம்ருதினும் இவரைச் சமாளிக்க முடியாமல் எட்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. 

BB Tamil 9 Day 2
BB Tamil 9 Day 2

பிரச்சினைகளுக்கு நடுவில் திவாகரா அல்லது பிரச்சினையே திவாகர்தானா?

பியானோ வாய்ஸில் பேசும் வியன்னாவிற்கு சண்டை கூட போடத் தெரியும் என்பதை அறிந்து கொண்ட நாள் இது. ‘குஷி’ திரைப்பட ஜோதிகாவையே மிஞ்சும் வகையில் விதம் விதமான எமோஷன்களைக் கொட்டி ‘ஓ..’ என்று முகத்தை வெட்டிக் கொண்டு போனார். பிரவீன் ராஜூடம்தான் இந்தப் பஞ்சாயத்து. “நான் பேசும் போது என் கண்ணைப் பார்த்து பேசணும். அது என்ன மரியாதை இல்லாம திரும்பிக்கறது,?” என்பது வியன்னாவின் பிராது. 

வியன்னாவுடன் பிரவீன் மல்லுக் கட்டுக் கொண்டிருக்க, ரயில் ஓடுவது போல் கையை வைத்துக் கொண்டு அங்கு வந்த திவாகர் “அதாவதும்மா.. அவங்க என்ன சொல்றாங்கன்னா..” என்று பஞ்சாயத்து நடுவராக உள்ளே நுழைய “பொண்ணுங்களுக்கு ஒண்ணுண்னா இவர் வந்துடுவாரே” என்று சொல்லி திவாகர் மீதுள்ள எரிச்சலைக் காட்டினார் பிரவீன்ராஜ்.

திவாகரைச் சுற்றி பிரச்சினை ஏற்படுகிறதா அல்லது பிரச்சினைகளின் நடுவில் திவாகர்  நின்று கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. சூப்பர் டீலக்ஸ் வீட்டைச் சேர்ந்த ரம்யாவும் அரோராவும், போர்வையை மடிக்கச் சொல்லி திவாகரை வேலை வாங்க, அந்த எரிச்சலில் ‘கன்ட்ரி ப்ரூட்ஸ்’ என்று பட்லர் இங்லீஷில் முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார் திவாகர் துரை. 

“கன்ட்ரி ப்ரூட்ஸ்னா என்னது. நாட்டுப் பழமா?” என்கிற மாதிரி ரம்யா சந்தேகம் கேட்க “தற்குறி முட்டாள்ன்னு ஆக்ஸ்போர்டு மொழில சொல்லிட்டுப் போறாரு” என்று அரேரா டிக்ஷனரி விளக்கம் தர ‘அடேய்.. இதோ வரேண்டா.. உன்னைய..” என்கிற மாதிரி துணியை வரிந்து கட்டிக் கொண்டு திவாகரைத் தேடி ஓடினார் ரம்யா. “நான் உங்களைச் சொல்லலம்மா. சும்மா பொதுவா சொல்லிப் பார்த்தேன்’ என்று புன்னகை அரசி சிநேகாவிற்கே  டஃப் ஃபைட் கொடுப்பது போல் மந்தகாசமான புன்னகையுடன் சமாளித்துப் பார்த்தார் திவாகர். ஆனால் அந்த உத்தி வேலையாகவில்லை. 

BB Tamil 9 Day 2
BB Tamil 9 Day 2

உக்கிரமாக நடந்த சண்டையில், சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யூ போல சுழன்று சுழன்று போராடினார் திவாகர். ‘இதுக்குத்தான் சொல்றது.. பொண்ணுங்க கிட்ட மரியாதையா பேசணும்’ என்று சமயம் பார்த்து சொல்லி சரியாக பழிதீர்த்துக் கொண்டார் பிரவீன்ராஜ். சமாதானம் செய்யப் போன எஃப்ஜேவும் கம்ரூதினும் திவாகர் செய்த அலப்பறையால் கோபமாகி கைகலப்பாகும் நிலைமைக்குச் சென்றது. 

“நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க” – பிக் பாஸிற்கு ஆறுதல் சொன்ன திவாகர். 

உள்ளே இத்தனை களேபரம் நடந்து கொண்டிருக்க, கார்டன் ஏரியாவில் ‘தண்ணீர் வருகிறதா?’ என்று குத்த வைத்து பார்க்கும் பணியில் பரிதாபமாக அமர்ந்திருந்தார் சபரிநாதன். பிறகு அவரும் உள்ளே வந்து சண்டையின் ஜோதியில் ஐக்கியமானார். 

போர் களத்திலிருந்து தப்பித்து நேராக பாத்ரூம் காமிராவை நோக்கி ஓடிய திவாகர் “பாருங்க.. பிக் பாஸ்.. என்னைத்தான் எல்லோரும் டார்கெட் பண்றாங்க.. ஆனாலும் நீங்க கவலைப்படாதீங்க. ஆயிரம் பேர் சுத்தி அடிச்சாலும் அதை சமாளிக்கக்கூடிய திறமை என் கிட்ட இருக்கு” என்று காமிராவிற்கு க்ளோசப்பாக சென்று பன்ச் வசனம் பேசிய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த குழந்தைகள் நிச்சயம் பயத்தில் அலறியிருக்கும். இவர் பிக் பாஸிடம் ஆறுதல் தேடிச் சென்றாரா அல்லது பிக் பாஸிற்கே ஆறுதல் சொல்லச் சென்றாரா என்று நமக்குத்தான் குழப்பமாக இருக்கிறது. 

BB Tamil 9 Day 2
BB Tamil 9 Day 2

சூப்பர் டீலக்ஸ் பவரைக் கொண்ட சுபிக்ஷா “பார்த்து துடைங்க.. அழுக்கு போகலை. கண்ணாடி போடலையா?” என்று பார்வதியைப் பார்த்து யதார்த்தமாக கேட்க “ஏய்.. யாரைப் பார்த்து கண்ணாடின்னு கிண்டல் பண்றே.. இதெல்லாம் என் கிட்ட வெச்சுக்காத. நான் லென்ஸ் கூட போட்டிருப்பேன். அது உனக்குத் தெரியுமா. இந்த வாழைப்பழத்துல ஊசி ஏத்தற வேலையெல்லாம் என் கிட்ட வேணாம். புரியுதா?” என்று  எகிற, பார்வதியை டார்கெட் செய்யப் போன சுபிக்ஷா, தானே டார்கெட் ஆகி அடி தாங்காமல் “ஏன்யா.. சகலை.. அவ கைய வெச்சு முதுகுல அந்தக் குத்து குத்தறா.. பார்த்துட்டு சும்மாவா இருக்கற?” என்கிற வடிவேலு காமெடி மாதிரி, ரம்யா மற்றும் அரோராவிடம் சென்று புலம்பிக் கொண்டிருந்தார். 

மினரல் வாட்டரில் காரக்குழம்பு செய்த கனியக்கா

ஆளாளுக்கு தண்ணி தண்ணி என்று அலைந்ததால் “சரி.. குடிக்கற தண்ணி மட்டும் எவ்ளோ வேணா தரேன். பொழச்சுக்குங்க” என்று பிக் பாஸ் கருணை காட்டியதில் மக்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை. “ஆக்சுவலி… காரக்குழம்புக்கு மினரல் வாட்டர் ஊத்தினாதான் ஸ்பைஸியா வரும்” என்று குக் வித் கோமாளி நினைப்பில், குடிநீரை சமையலுக்கு பயன்படுத்தி பிக் பாஸிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார் கனியக்கா. “பாவமாச்சேன்னு குடிக்க தண்ணி குடுத்தா.. எதுக்கு வேணா பயன்படுத்துவீங்களா?” என்று காண்டான பிக் பாஸ், கேஸ் கனெக்ஷனை கட் செய்து எரிச்சலைக் காட்டினார். 

BB Tamil 9 Day 2
BB Tamil 9 Day 2

‘விதிமுறைகள் மீறப்பட்டிருக்கு. இதுக்கான தண்டனையை எதிர்கொண்டே ஆகணும்’ என்று நாட்டாமையாக மாறிய பிக் பாஸ், ‘சூப்பர் டீலக்ஸ்’ வீட்டில் இருந்து ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தீர்ப்பளிக்க அத்தனை பேரும் தியாகப் பிரம்மமாகிய   பிரவீன் காந்தியின் பக்கம் திரும்ப “யப்பா சாமிகளா.. நான் ஏற்கெனவே ஒரு முறை ரத்தம் கொடுத்துட்டேன். திரும்பத் திரும்ப என்னைத் தியாகியாக்கி கும்மியடிக்காதீங்க” என்று அவர் அலற இறுதியில் பலியாடாக துஷாரை தோ்ந்தெடுத்தார்கள். அவர்தான் விதியை மீறி விக்ரமிற்கு சாப்பாடு கொடுத்தார் என்கிற காரணத்திற்காக. 

இதே போல் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் சூப்பர் டீலக்ஸ் வீட்டிற்கு சென்றாக வேண்டும். அந்த வசதியான வாழ்க்கை நிலையில்லாதது என்பதைப்  பலரும் புரிந்து கொண்டதால் யாருமே பங்களா வீட்டிற்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே கேப்டன் பதவிக்கு போட்டியிட முடியும் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ‘ஓகே.. உங்களுக்காக நான் அந்த தண்டனையை ஏத்துக்கறேன்..’ என்பது போல கொஞ்சு மொழியில் சொன்ன வியன்னா, மனதிற்குள் குஷியாகி சூப்பர் டீலக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்க ஜாலியாக சென்றார். 

ஆரம்பித்தது ‘அழுகாச்சி’ டாஸ்க்  – டாப் ரேங்கில் அழுத நந்தினி

கனியக்கா மிகுந்த சுத்தம் பார்ப்பதால் அவருக்கு OCD இருக்கிறதோ என்கிற சந்தேகம் ஆதிரைக்கும் பார்வதிக்கும் எழுந்தது. இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “OCD-ன்னா என்னங்கம்மா?” என்று விசாரித்தார் திவாகர். இவர் தன்னை டாக்டர் என்று எப்படி அழைத்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. ‘உங்களுக்கு காய்ச்சல் இருக்கா?” என்கிற மாதிரி நேரடியாகவே சென்று கனியக்காவிடம் இதைப் பற்றி விசாரித்தது நுண்ணுணர்வற்ற செயல். 

அடுத்ததாக ஆரம்பித்தது ‘அழுகாச்சி’ டாஸ்க். ஒரு நாளைக்கு மூன்று நபர்கள் வீதம் தங்களின் வாழ்க்கைக் கதையை சொல்ல வேண்டும். சிறந்த 2 கதைகள் சொன்னவருக்கு நாமினேஷன் ஃப்ரீ பரிசு கிடைக்கும். 

BB Tamil 9 Day 2
BB Tamil 9 Day 2

முதலில் வந்த நந்தினியின் கதை உண்மையிலேயே உருக்கமாக இருந்தாலும் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே அழுகையுடன் வார்ம்-அப் ஆகி வந்தார். கதை சொன்ன நேரம் முழுவதும் தீராத அழுகைதான். “மனுஷங்க கிட்ட கூட எனக்கு உண்மையான அன்பு கிடைக்லை. நாய், பூனைக்குட்டி கிட்ட மட்டும்தான் கிடைச்சது” என்று நந்தினி சொன்னது, நாய் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். 

‘வா.. தலைவா.. வா.. தலைவா’ – திவாகர் ரசிகர் மன்றத் தலைவராக மாறிய பார்வதி

அடுத்த வந்த கெமியின் கதையும் உருக்கமானதுதான். ஆனால் அவர் அழுகையெல்லாம் சிந்தாமல் உணர்ச்சிகரமாக பேசினார். இவருக்குள் ஒரு சிறந்த வசனகர்த்தா இருக்கிறார் போல. “பாதைல முள் இருக்கலாம்.. ஆனா செருப்பே முள்ளா இருந்தா” என்று இவர் பேசியதைப் பார்த்து “நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா. .பின்றாம்ப்பா” என்று திரைப்பட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் உணர்ச்சிவசப்பட்டிருப்பார்கள். ‘ஆம்பளை மாதிரி இருக்கேன்னு சொன்னாங்க’ என்று தன் மீது ஏவப்பட்ட உருவக்கேலிகளைப் பற்றி சொன்ன கெமி “இதையெல்லாம் மீறி போராடறது ஆண்மைன்னா.. நான் ஆம்பளைதான்” என்று விசுவின் பட பாணியில் தொடர்ச்சியான டயலாக்காக சொன்னது ரசிக்கத்தக்கது. 

BB Tamil 9 Day 2
BB Tamil 9 Day 2

கடைசியாக வந்தார் திவாகர். இவர் உருக்கமாக ஆரம்பித்தாலும் மக்கள் அதற்கு நிச்சயம் சிரிக்கத்தான் போகிறார்கள் என்பது இவருக்கே தெரிந்திருக்கும் போல. எனவே “என் கிட்ட பட்டன் போன்தான் இருந்தது. நான் ஒண்ணும் யூட்யூபர்லாம் இல்ல. இருந்தாலும் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கன்னா.. அதுக்கு என் நடிப்புத் திறமைதான் காரணம். அந்தத் திறமை உங்க கிட்ட கிடையாது. இன்னிக்கு தேதில என்னைப் பத்திய டிரோலிங் வீடியோதான் அதிகம். இருந்தாலும் போராடிக்கிட்டே இருக்கேன்.. இருப்பேன். இந்த உலகமே என்னை எதிர்த்தாலும்.. ‘ என்கிற ரேஞ்சிற்கு திவாகர் பேசிக் கொண்டே போக …“வா. தலைவா.. வா.. தலைவா’ என்று இவருடைய பேச்சை ரசித்துக் கேட்டார் பார்வதி. இருவருக்குள்ளும் பலமான கூட்டணி ஏற்பட்டிருக்கிறது போல. பார்வதி மட்டுமே திவாகரின் பேச்சை ரசித்தார் என்கிற போது மற்றவர்கள் ‘அவனுக்கென்னப்பா பைத்தியம்.. என்ன வேணா பேசலாம்” என்கிற மோடில் நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தார்கள். 

யூட்யூபர் என்கிற வார்த்தையை மலினமாக பயன்படுத்தியதற்காக, விக்கல்ஸ் விக்ரம் ஆட்சேபம் எழுப்பி “எனக்கு.. எங்க டீமிற்கு சோறு, குழம்பு, பிரியாணி எல்லாம் போட்டதே யூட்யூப்தான். அதை சாதாரணமா பேசாதீங்க” என்று திவாகரிடம் சொல்ல அவரை இடது கையால் ஹாண்டில் செய்து கெத்து காட்டினார் திவாகர். விக்ரம் வெறுப்புடன் நகர்ந்து சொல்ல “இல்லீங்க பாஸ்..

BB Tamil 9 Day 2
BB Tamil 9 Day 2

அவரு என்ன சொல்றார்னா..” என்று சபரி பஞ்சாயத்து செய்யும் ஆர்வத்துடன் விளக்கம் அளிக்க முன்வர “அவர் ஹர்ட் ஆனா ஆகிட்டுப் போகட்டும். அதுக்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும்?” என்று திவாகர் சொன்னதைக் கேட்டு ‘வா.. தலைவா.. வா.. தலைவா.. என்று நிச்சயம் ஒரு குரல் ஒலித்திருக்கும். அது பார்வதி கூட அல்ல. பிக் பாஸ் குரல்தான்.

ஆக.. இந்த இரண்டாவது நாளிலும் பொிதாக எந்தவொரு சுவாரசியமும் இல்லை. 

ஆரம்பித்த உடனேயே ‘யாராவது சுவாரசியமான வைல்ட் கார்ட் என்ட்ரி வந்து நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா?” என்று நினைக்க வைத்தது இந்த சீசன் மட்டும்தான். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *