
திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்தவர் சொக்கநாதர் (55) திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக உள்ளார். இவரின் மனைவி விஜய முருகேஸ்வரி (47), இவர்களுடைய மகள் காருண்யா ஸ்ரீதர்ஷினி (19).
பிளஸ் 2 படித்து முடித்த இவர், மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். இதற்காக நீட் தேர்விற்குப் படித்து வந்துள்ளார். கடந்த நீட் தேர்வில் காருண்யா ஸ்ரீதர்ஷினி 228 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்குப் போதுமான மதிப்பெண்கள் இல்லை என்பதால் கவுன்சிலிங்கில் இவருக்கு சீட் கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர், எப்படியாவது மருத்துவ சீட் பெற வேண்டும் என்ற ஆசையில் 456 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதாகப் போலியான சான்றிதழ் தயாரித்துள்ளார். மேலும் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் தனக்கு இட ஒதுக்கீட்டில் படிப்பதற்கு இடம் கிடைத்ததற்கான சான்றிதழையும் போலியாகத் தயாரித்து கல்லூரிக்கு அட்மிசனுக்காகப் பெற்றோருடன் சென்றுள்ளார்.
அங்கு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு அவருக்கு அட்மிஷன் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு நடந்த சரிபார்ப்பு பணியில் காருண்யா ஸ்ரீதர்ஷினி, நீட் தேர்ச்சி மற்றும் கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களைப் போலியாகத் தயாரித்துக் கொடுத்து மருத்துவப் படிப்பில் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே இது குறித்து திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி முதல்வர் வீரமணி, மாவட்ட எஸ்.பி., பிரதீப்பிடம் புகாரின்படி குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி காருண்யா ஸ்ரீதர்ஷினி, அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட அப்பா சொக்கநாதர், அம்மா விஜய முருகேஸ்வரி ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.