
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள அரசு நூலகத்தில் தினமும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அரசு தேர்வுகளுக்கும், தனி தேர்வுகளுக்கும் படித்து வருகிறார்கள்.
தற்போது இந்த இடம் குடிகாரர்களின் அராஜகம் அதிகமாகி வருவதால் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நூலகத்திற்கு வரும் இளைஞர்கள் நம்மிடையே பேசும் போது, “இங்குள்ள சாலை முழுவதும் பள்ளங்களாக உள்ளது.
மழைக்காலங்களில் நூலகத்தின் வளாகங்கள் முழுவதும் மழைநீர் ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்தச் சமயங்களில் பள்ளங்களைக் கடந்து வருவதே மிகவும் சவாலானதாக இருக்கிறது.
நூலகத்திற்குப் பக்கத்தில் பூ மார்க்கெட் இருப்பதனால் அங்குக் கொட்டப்படும் கழிவுகள், நெகிழி குப்பைகளின் துர்நாற்றமும் இந்தப் பகுதி முழுக்கவே வீசுகிறது.
அதுமட்டுமில்லாமல் இரவில் இந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் குடித்துவிட்டு இங்கேயே பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். ஒவ்வொரு நாள் காலையில் நாங்களே அந்தப் பாட்டில்களை அப்புறப்படுத்துகிறோம்.
இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் குடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் இங்குப் படிக்க வந்த பெண்களின் பெற்றோர்கள், அவர்களைப் படிக்க அனுப்புவதில்லை.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் இரண்டு முறை புகார் மனு எழுதிக் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிகாரர்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது” என வேதனையோடு தெரிவித்தனர்.

இது குறித்து வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்ட போது, “உடனடியாக நடவடிக்கை எடுத்து நூலகத்தின் சுற்றுப்புறங்களில் இருக்கும் குப்பை மற்றும் சகதிகளை அகற்றி தூய்மை செய்தனர்” என்றார், மது அருந்துவோரின் செயல்பாடுகளைப் பற்றி கேட்கும் பொழுது, “அதற்கு நூலகத்தின் நிர்வாகம்தான் சிசிடிவி கேமரா வைத்து கண்காணித்து காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும்” என்றார் வட்டாட்சியர்.