
புதுடெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அவர் குஜராத் முதல்வர் பதவியில் நீடித்தார். கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம்தேதி அவர் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 3-வது முறையாக அவர் பிரதமராக பதவியேற்று நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.
அரசின் தலைமைப் பொறுப்பில் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக பதவியேற்றேன். பூகம்பம், புயல், வறட்சி, அரசியல் குழப்பம் நிறைந்த காலத்தில் முதல்வராக பணியாற்றினேன். பல்வேறு சவால்களை கடந்து குஜராத்தை கட்டியெழுப்பினேன். நாட்டு மக்களுக்கு திறம்பட சேவையாற்றினேன்.