
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம், இந்தியா முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் தற்கொலை தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-ல் நாடு முழுவதும் 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் 4,690 பேர் விவசாயிகள். 6,096 பேர் விவசாயத் தொழிலாளர்கள். தொடர்ந்து 2023-ம் ஆண்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துள்ளது.
உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்து வருவதாகவும், வேளாண் உற்பத்தி உயர்ந்து, வேளாண் மகசூல் மும்மடங்கு உயர்ந்திருப்பதகாவும், இதனால் விவசாயிகள் வருமானம் இருமடங்கு அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் அறிவித்தும் விவசாயிகளின் தற்கொலைகள் ஏன் தொடர்கிறது. பல பருவங்களில் மகசூலில் பாதிப்புகளே அதிகம். அதேபோல் பேரிடர் கால பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடையாது.