
இதே நாள் 2023 அன்று இஸ்ரேல் – காஸா போர் தொடங்கியது. இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. சர்வதேச விதி மீறலில் தொடங்கி, ஐ.நா சபையை அவமானப்படுத்தியது, சர்வதேச நீதிமன்றத்தைப் புறக்கணித்தது, சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தைத் துச்சமென நடத்தியது என இஸ்ரேல் நடந்துகொண்ட விதங்கள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டன.
ஆனாலும், கடந்த ஆறு மாதங்களாகத்தான் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனங்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.
காசாவில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம், கல்விக்கூடங்களும், மருத்துவமனைகளும் குறிவைத்து தகர்க்கப்பட்டது, அகதிகள் முகாம் மீது தாக்குதல், சர்வதேச உதவிகளை காசாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்தது, 66,000-க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்தது உள்ளிட்ட பல காரணங்கள் இஸ்ரேல் மீது கண்டனம் வலுப்பெறுவதற்கு அடித்தளமிட்டன. இந்த நிலையில், இஸ்ரேலியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்திருக்கிறது இஸ்ரேல் ஜனநாயக நிறுவனம்.
இது தொடர்பாக அந்த நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில், “காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டதாகப் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். பணயக்கைதிகள் ஆபத்தில் இருப்பதுதான் இந்தப் போர் முடிவடைய வேண்டும் என்பதற்கான முக்கிய காரணமாகக் கருதுகின்றனர்.
66 சதவிகித இஸ்ரேலியர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலைச் சுற்றியுள்ள தோல்விகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என 45 சதவிகிதப் பேரும், போர் நிறுத்தத்துக்குப் பிறகு பதவி விலக வேண்டும் என 19 சதவிகிதப் பேரும் தெரிவித்திருக்கின்றனர்.

18 சதவிகிதம் பேர் இந்தப் போருக்கு நெதன்யாகுதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் ராஜினாமா செய்ய தேவையில்லை எனவும் கருதுகின்றனர். வெறும் 13 சதவிகிதம் பேர் மட்டுமே நெதன்யாகுவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
பெரும்பான்மையான மையவாதிகள் 63 சதவிகித பேரும், இடதுசாரி யூதர்கள் 88 சதவிகித பேரும் நெதன்யாகு இப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.