
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை மத்தியப் பிரதேச மாநிலத்தில் கஜுராஹோ கோயில் வளாகத்தில் தலை சேதமடைந்த விஷ்ணு சிலையை மாற்றித் தரக் கோரிய மனு மீதான விசாரணை நீதிமன்றம் 1இல் நடைபெற்றது.
நீதிபதி மீது காலணி வீச்சு
விசாரணையின்போது தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த நீதிமன்ற காவலர்கள் உடனடியாக அவரிடம் இருந்து காலணியைப் பறித்து அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர். “சனாதன தர்மத்துக்கு இழுக்கு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது” என்று கூறியபடி அந்த நபர் கூச்சலிட்டது பெரும்பேசுபொருளாகியிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து கவாய் கூறுகையில், “இதற்கெல்லாம் கவனத்தைச் சிதறவிடக் கூடாது. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். இது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னைப் பாதிக்காது” என்று தன் பணியைச் சலனமின்றித் தொடர்ந்தார்.
பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின், விசிக திருமாவளவன் வரை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நீதிபதி பி.ஆர். கவாய் ஆதரவாகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து படித்து முன்னேறி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய்க்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? என்ற கேள்வி விவாதப்பொருளாகி வருகிறது.
“அந்தக் காலணி அவர் மீது மட்டும் வீசப்பட்ட காலணி அல்ல; இந்திய நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக வீசப்பட்ட காலணி ஆகும்” என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து கவாய் மீது காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோர் வழக்கறிஞராகப் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் மீது காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோர், “எனக்குப் பயமுமில்லை. நடந்ததற்கு நான் வருத்தப்படவுமில்லை” என்று பேட்டியளித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திற்கு ராகேஷ் கிஷோர் அளித்திருக்கும் பேட்டியில், “மத்தியப் பிரதேச மாநிலத்தில் கஜுராஹோ கோயில் வளாகத்தில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மாற்றித் தரக் கோரிய மனு விசாரணையில் நீதிபதி கவாய், ’இது முற்றிலும் ஒரு விளம்பர நல வழக்கு. நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொன்னால், நீங்களே பிரார்த்தனை செய்யுங்கள்’ என்றார்.
நீதிபதி இப்படி சனாதனத்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரரின் மனுவை நிராகரித்தாலும் பரவாயில்லை, இப்படி அவமதித்து மனதைப் புண்படுத்தக் கூடாது.
அதனால்தான் நான் காலணியை வீச முயன்றேன், சர்வவல்லமையுள்ள அந்தக் கடவுள் சொல்லித்தான் நான் அப்படிச் செய்தேன். அதனால் எனக்கு எந்தப் பயமும், அச்சமுமில்லை, நடந்ததற்கு நான் வருத்தப்படவுமில்லை. நான் ஒன்றும் குடிபோதையில் அதைச் செய்யவில்லை. நிதானமான மனநிலையில்தான் அப்படிச் செய்திருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

என் பெயர் டாக்டர் ராகேஷ் கிஷோர். யாராவது என் சாதியைச் சொல்ல முடியுமா? ஒருவேளை நானும் ஒரு தலித்தாக இருக்கலாம். அவர் (தலைமை நீதிபதி கவாய்) ஒரு தலித் என்று அடையாளப்படுத்திப் பேசுவது ஒருதலைப்பட்சமானது. அவர் ஒரு தலித் அல்ல. அவர் முதலில் ஒரு சனாதன இந்து.
பின்னர் அவர் தனது நம்பிக்கையைத் துறந்து புத்த மதத்தைப் பின்பற்றினார். புத்த மதத்தைப் பின்பற்றிய பிறகும் இந்து மதத்திலிருந்து வெளியே வந்துவிட்டதாக அவர் உணர்ந்தால், அவர் இன்னும் எப்படி ஒரு தலித் ஆவார்?” என்று பேசியிருக்கிறார்.