• October 7, 2025
  • NewsEditor
  • 0

சூழலே சிவப்பை பூசியவாறு இருக்க, மாலை சூரியன் மெல்ல மறையத் தொடங்குகிறது, கண்ணிற்கு எட்டும் தூரம் வரை வயல்வெளி ! தென்றலுக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருக்கின்றன செடிகொடிகள்! நெடுந்தூரத்தில் உள்ள ஆலமரத்தை நோக்கி, கிளிகள் சிறகடிக்க தொடங்கிவிட்டன.

இவையாவையும் இரசித்தவாறு மரத்தில், அம்மா சேலையால் ஆன ஊஞ்சலில் நீங்களும் உங்கள் தோழனும் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இதோ இந்த சிறிய பத்தியை படித்தவுடனே, நீங்கள் உங்கள் சிறு வயதிற்கே சென்றிருக்கலாம்! உங்களுடைய வயல்வெளிக்கு அருகே, உங்கள் தோழனுடன் ஊஞ்சல் ஆடி இருக்கலாம். மேலே, கிளிகள் என மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், உங்கள் கற்பனையில் 100 கிளிகள் ‌கூட‌ பறந்திருக்கலாம்.

இப்படி, நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் எண்ணங்களுக்கேற்ப கற்பனையாக உருவெடுக்கும் என்பதை நீங்கள் தற்போது உணர்ந்திருப்பீர்கள்.

புத்தக வாசிப்பு – நூலகம்

இதே சூழலை ஒரு காணொளியாகப் பார்த்திருந்தால், அதில் காட்சிப்படுத்தப்படுபவர் ‌தான் கதாநாயகர்! ஆனால் புத்தகத்தில் வாசிக்கும்போது உங்கள் கற்பனை ‌நிர்ணயிப்பவர் தான் எல்லாம்! இத்தகைய அளவில்லாக் கற்பனை சக்தியை உணர உதவுவதுதான் “புத்தக வாசிப்பு” எனும் கலை.

அத்தகைய புத்தக வாசிப்பின் மகத்துவத்தை உணர, சென்னை செங்குன்றம் பகுதியில் இயங்கிவரும் அரசு முழுநேர நூலகத்திற்குச் சென்றிருந்தோம்.

அனுபவம் பகிரும் நூலகர் ஜோதிபாபு:

நான் நூலகராகி 18 ஆண்டுகள் ஆகிறது, இந்த செங்குன்றம் நூலகத்திற்கு 2007ஆம் ஆண்டு வந்தேன்.

1958-ல் கீற்று கொட்டகை அமைத்து கட்டப்பட்ட நூலகம், இன்றைக்கு அடுக்கு மாடி கட்டிடமாக மாறியிருக்கிறது.

முதலில் இந்த நூலகத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த நூலகத்தில் 60,189 புத்தகங்கள் இருக்கின்றன. இன்றுவரை உள்ள மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 16,144! தமிழ்நாட்டிலேயே, அதிக உறுப்பினர்களைக் கொண்ட நூலகத்திற்காக 2023ஆம் ஆண்டு அரசிடம் இருந்து விருதும் பெற்றுள்ளோம்.

மேலும் இங்கே 8 கணினிகள், இலவச வைஃபை பயன்பாடு, கூடுதலாக பிரிண்டர்! இவை எல்லாமே வாசகர்களுடைய பயன்பாட்டிற்குத்தான்.

நூலகம்
நூலகம்

இதனால், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 250 வாசகர்களாவது நூலகத்திற்கு வருவார்கள். அதுவும் இல்லாமல் இது ஒரு முழுநேர நூலகம், அதாவது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கக்கூடியது.

போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி
போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி

அதனால், போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி எடுக்கும் நிறைய மாணவர்களும் இளைஞர்களும் வருகிறார்கள்.

கடந்த குரூப் 2 தேர்வுகளின் முடிவில் கூட இரண்டு மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணி நியமன ஆணை பெற்றிருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பு எளிமையாகிவிட்டது. தொடக்கத்தில் 20 ரூபாய் கொடுத்து உறுப்பினராக பதிந்துவிட்டால் போதும்! மேலும் ஆண்டுக்கு ஒரு முறை 5 ரூபாய் சந்தா! வாழ்நாள் முழுவதும் நீங்கள் வாசிக்கலாம். புத்தகங்களை வீட்டிற்கும் எடுத்துக்கொண்டு போய் வாசிக்கலாம்.

நூலகம்
புத்தக வாசிப்பு – நூலகம்

இதுமட்டுமில்லாமல், இணையதளங்களை பயன்படுத்தியும் புத்தக வாசிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்போதெல்லாம், நீங்கள் வாசிக்கக்கூட அவசியமில்லை வேறு ஒருவர் வாசிப்பதை ஆடியோ புக்காகவும் கேட்டு பயன்பெறலாம்.

நல்ல தொடக்க புள்ளி

ஆனாலும் புத்தகத்தை கையில் எடுத்து படிப்பது போல் வராது! புத்தகத்தை கையில் எடுத்து, தாள்கள் திருப்பும் சத்தம்! பழைய புத்தகங்களின் வாசம்! பேனா கொண்டு பிடித்த வரிகளை மேற்கோளிடுவது! ஒவ்வொருவருக்கும் உள்ள புத்தகத்தை கையாளும் பாணி என அது ஒரு தனி Feeling!

அதுவும் ஒரு புத்தகத்தை எங்கு அமர்ந்து வேண்டுமானாலும் வாசிக்க முடியும், இரயில் பயணங்கள் முதல் கழிவறை வரை புத்தகங்களை வாசிப்பவர்கள் உண்டு.

ஆனாலும், நூலகத்தில் வாசிக்கும் போதும் கிடைக்கும் அமைதியை வேறு இடங்களில் பெறுவது கடினம்! இவை பரிணாமம் பெற்று பெரும்பாலான வசதிகள் இணைய வழி புத்தகங்களில் வந்தாலும் கூட, கையில் எடுத்து படிப்பது போல் வராதுன்னு, இங்கு வரக்கூடிய பல வாசகர்கள் சொல்றாங்க.. மேலும், அந்நூலகத்தில் பணியாற்றிவரும் ஸ்ரீதேவி அம்மாவுடன் பேசியிருந்தோம்.

புத்தக வாசிப்பை இப்படி தொடங்குங்க! வாசிப்பை புதியதாக தொடங்குபவர்கள், எடுத்தவுடனே பொன்னியின் செல்வன் கேட்டால், அதை தொடர்வது சற்று சிரமமாக இருக்கக்கூடும்.

அதனால், முதலில் நமக்கு எந்த துறை பிடிக்கும்னு கண்டுபிடிக்க வேண்டும். பின்னர், அது சார்ந்த சிறிய புத்தகங்களை தேர்ந்தெடுத்து, ஒரு நாளுக்கு 5 பக்கங்கள் படிப்பேன் என்று இலக்கு வைத்து வாசிக்க தொடங்கும்போது, இது பழக்கமாக மாறக்கூடும்.

வாசித்தது நினைவில் இருக்க வேண்டுமா! அப்போ அதைப்பற்றி நண்பர்களோட கலந்துரையாடுங்க! வாய்ப்பிருந்தால், முக்கிய மேற்கோள்களை தனி நோட்டில் எழுதி வைக்கலாம். இன்றைய இளைஞர்கள், இணைய வழியில் வாசிக்க தொடங்குவதும் ஒரு நல்ல தொடக்க புள்ளியாக அமையும்.

இளைஞர்களும் நிறைய வாசிக்கிறார்கள்!

அந்தக் காலத்தில் வாசிப்புதான் பொழுதுபோக்கில் ஒரு பெரும் பகுதியாக இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் எல்லாரிடமும் திறன்பேசி வந்திடுச்சு! கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்! பொழுதுபோக்குவதற்குக் கவலையே இல்லை!

ஆனாலும் இன்றைக்கும் நிறைய இளைஞர்கள் வாசிக்கிறார்கள்! நோக்கம் தான் வேறு! அரசு வேலைகளில் சேர்வதற்கான தேர்வுகளில் வெற்றியடையவே நிறைய வாசிக்கிறார்கள்.

நூலகம்
புத்தக வாசிப்பு – நூலகம்

ஒவ்வொரு புத்தகமும் ஒரு சினிமாவிற்கு சமம்.

அப்போது, புத்தக வாசிப்பு என்பது ஒரு குறுகிய கால இலக்காக மாறிவிடுகிறது. ஆனால், வாசிப்பு ஒரு பழக்கமாக மாறவேண்டும் என்றால், “தேர்வுக்காக புத்தகங்கள், செய்தித்தாள்கள் வாசிப்பது அல்லாமல், இவையெல்லாம் ஏற்கனவே வாசித்து வருவதால் நான் தேர்வு எழுதப் போறேன்” என்ற நிலை வேண்டும்.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு சினிமாவிற்கு சமம். எழுத்துக்கள்தான் சினிமாவாக மாறுகிறது என்பது நாம் அறிந்ததே!ஆனால், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் பாராட்டுகளும் புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களுக்குக் கிடைப்பதில்லையோ என எனக்கு ஒரு கவலை உண்டு.

நூலகம்
நூலகம்

அதனால்த நான், எந்த புத்தகத்தை ‌படித்தாலும், அலைப்பேசி மூலம் அல்லது இன்றைய சமூகவலைதங்களை பயன்படுத்தி ‌அதன் எழுத்தாளர்களை தொடர்பு ‌கொண்டு, புத்தகத்தை ‌பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்வேன்.

அது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக பல எழுத்தாளர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

“ஒவ்வொரு ‌படைப்புகளுக்கு‌ கிடைக்கும் முக்கியத்துவம் ; படைப்பாளிகளுக்கும் கிடைக்க வேண்டும்”.

நீங்களும் நூலகர் ஆகலாம்

புத்தக வாசிப்பு மேல் அதீத ஆர்வம் இருக்கிறதா! அமைதியை ‌விரும்பக்கூடியவர்களா! நிச்சயமாக ‌நூலகராவது ஒரு நல்ல வேலை வாய்ப்பு.

12 ஆம் வகுப்பு முடித்த பிறகு, Bachelor of Library Science என்று ‌சொல்லப்படும் ஓர் ஆண்டு, இளங்கலை நூலகவியல் படிக்க வேண்டும். இதில், முதுகலை கல்வியும் உண்டு.

நூலகம்
நூலகம்

பின்னர், TNPSC தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதைப் பொறுத்து, நீங்கள் அரசுப் பள்ளிகளில், பொது நூலகங்களில், கிளை நூலகங்களில் நூலகராகப் பணி செய்யும் வாய்ப்பு உள்ளது.

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், தன்னுடைய அமைதி மாறாமல் செயல்பட்டு வரும் இடங்களில் நூலகங்கள் முக்கிய இடத்தில் உள்ளன.

அதனால், ரொம்ப Stress ஆக இருக்கா? மன அமைதியோடு சேர்ந்து அறிவுக்கும் தீனி போட வேண்டுமா? உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நூலகத்திற்குப் போங்க!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *