
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதிய அளவுக்குப் பயனளிக்கவில்லை. திருமண ஆசை, பங்கு வர்த்தகம், டிஜிட்டல் கைது என்று எதையாவது சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றி பணத்தைச் சைபர் கிரிமினல்கள் அபகரித்துக்கொள்கின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்த 59 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை திருமண ஆசையில் ரூ. 2.3 கோடியை மர்ம நபர்களிடம் இழந்துள்ளார். ஆசிரியை கணவர் இறந்துவிட்டார். அவரது மகனும் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். இதனால் ஆசிரியை தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
எனவே தனக்குரிய வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்து இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக மேட்ரிமோனியல் தளத்தில் தனது பெயரைப் பதிவு செய்து வைத்தார்.
அதனைப் பார்த்துவிட்டு ஆஹன் குமார் என்பவர் ஆசிரியையைத் தொடர்பு கொண்டு பேசினார். குமார் தன்னை அமெரிக்கப் பிரஜை என்றும், ஜார்ஜியாவில் முதுகலைப்பட்டம் முடித்து விட்டு ஆயில் எடுக்கும் இஸ்ரேல் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டார். அவர் தற்போதுதான் கடலில் இருப்பதாகத் தெரிவித்தார். அதோடு ஆசிரியையைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்தார். அவரது வாக்குறுதியை ஆசிரியைக் கண்மூடித்தனமாக நம்பினார்.
2019ஆம் ஆண்டு அவர்களிடையே முதல் முறையாகத் தொடர்பு ஏற்பட்டது. வேலை முடிந்து வந்ததும் திருமணம் செய்துகொள்வதாக வாட்ஸ்அப் மூலம் அமெரிக்க நம்பரில் அந்த நபர் சாட்டிங் செய்தார். அதோடு ஆசிரியையைத் தனது மனைவி என்றே அழைக்க ஆரம்பித்தார். இதில் மிகவும் உருகிப்போன ஆசிரியை அந்த நபர் என்ன சொன்னாலும் கேட்க ஆரம்பித்தார்.
முதல் முறையாக 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த நபர் தான் கடலில் இருப்பதால் சாப்பாட்டுக்குக்கூட பணம் இல்லை என்றும், வேலை முடிந்த பிறகுதான் சம்பளம் கொடுப்பார்கள் என்றும் கூறி பண உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார். சம்பளம் வந்தவுடன் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் சொன்னார். இதனை அப்பெண் நம்பினார். இதனால் அவர் கேட்ட பணத்தை அந்த நபர் சொன்ன வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு காரணங்களைச் சொல்லி பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். ஆசிரியையும் அவரை முழுமையாக நம்பியதால் பணம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இது குறித்து ஆசிரியை கூறுகையில், ”நான் அவருடன் கொண்டிருந்த உறவுக்கு மதிப்பு கொடுத்தேன். அதனால் அவரை முழுமையாக நம்பினேன். எனவேதான் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். உதிரிப்பாகங்கள் வாங்க வேண்டும் என்றும், அபராதம் செலுத்த வேண்டும் என்றும், சாப்பாடு செலவு, மருத்துவக் காரணங்களைக் கூறியும் பணம் கேட்டார்.
வேலை முடிந்து வந்தவுடன் திரும்பக் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு வரை ரூ.2.3 கோடியை அவருக்கு அனுப்பி வைத்தேன். கடைசியாக கடந்த நவம்பர் மாதம் ரூ.3.5 லட்சம் கேட்டார். நான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்ததால் அவரது செயல்பாட்டில் சந்தேகம் வந்து கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி கேட்டேன்.

என்னிடம் இருந்த பணம் முழுக்க காலியாகிவிட்டது என்றும், இப்போது கடன் வாங்கிக்கொண்டிருக்கிறேன் என்றும் சொன்னேன். அதன் பிறகு எனது அழைப்புகளைத் தவிர்க்க ஆரம்பித்தார். பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு ஆண்டாகக் காத்திருந்தேன். ஆனால் பணம் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியை போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் சைபர் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது போன்ற மோசடியில் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், தெரியாத நபர்களிடமிருந்து ஆன்லைனில் நட்பு கோரிக்கை வந்தால் கவனத்துடன் செயல்படும்படி கேட்டுக்கொண்டனர்.