
வாலிபர் ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடிய கதையைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் விவாகரத்து கிடைத்தவுடன் அவரது தாயார் அவருக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார். பாலாபிஷேகம் முடிந்த பிறகு புத்தாடை அணிந்து கேக் வெட்டி தனது விவாகரத்தைக் கொண்டாடி இருக்கிறார்.
அந்த கேக்கில் 120 கிராம் தங்கம், ரூ.18 லட்சம் என்று எழுதப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த வாலிபர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு 120 கிராம் தங்கமும், ரூ.18 லட்சம் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதனைக் குறிக்கும் வகையில் “Happy Divorce 120 gram gold 18 lakh cash” என்று விவாகரத்து கேக்கில் எழுதி இருக்கிறார்.
அவர் தனது குடும்பத்தினர் அனைவர் முன்னிலையில் விவாகரத்து கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்துக் கொண்டாடி இருக்கிறார். அதோடு அந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், “தயவு செய்து மகிழ்ச்சியாக இருங்கள். விவாகரத்தைக் கொண்டாடுங்கள். மன அழுத்தம் அடையாதீர்கள். 120 கிராம் தங்கம், ரூ.18 லட்சம் வாங்கவில்லை. ஆனால் அதனைக் கொடுத்தேன். நான் இப்போது சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். எனது வாழ்க்கை, எனது ஆட்சி” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மகன் விவாகரத்து வாங்கி வந்த பிறகு தாயார் மகனுக்கு பாலாபிஷேகம் செய்த வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதோடு நெட்டிசன்கள் இது தொடர்பாக தங்களது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.
மனைவியை விவாகரத்து செய்த வாலிபரை ”அம்மா பையன்” என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் தனது பதிவில், ”பெண்தான் இந்த மோசமான உறவை முறித்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்தப் பெண்ணிற்கு வாழ்த்துக்கள். நீங்கள் உங்களது தாயாருடன் இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களது வாழ்க்கை அமைதியான முறையில் இருக்கவேண்டுமானால் இது போன்ற அம்மா பையனிடமிருந்து பெண்கள் விலகி இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் உங்களது வாழ்க்கையில் பெரிய பேரழிவைச் சந்திப்பீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலர் மட்டும் மனைவியை விவாகரத்து செய்த வாலிபரை ஊக்கப்படுத்தி இருக்கின்றனர். ஒரு பெண் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் மாமியாரும் இப்படித்தான் கொண்டாடியிருப்பார், ஆனால் நான் ஒரு பிடிவாதக்கார மருமகள், நான் எல்லாத்தையும் தாங்கிக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.