
இந்நேரத்திற்கு பெரும்பாலானவர்களுக்கு போனஸ் கையில் கிடைத்திருக்கும்.
அதை வைத்து துணிமணி வாங்கலாம்… பட்டாசு வாங்கலாம்… மொபைல் போன் வாங்கலாம் என்று ஏகப்பட்ட ஷாப்பிங் லிஸ்டை பிளான் செய்திருப்பீர்கள்.
தீபாவளிக்கு அவைகளும் முக்கியம் தான். தீபாவளியைத் தாண்டியும் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை போனஸை வைத்து செய்யலாம். இதனால், உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கும் 100 சதவிகித நிதிப் பாதுகாப்பு கிடைக்கும். அவை என்ன என்பதை பார்க்கலாம்… வாங்க…
1. எமர்ஜென்சி ஃபண்ட்
வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது. அந்த எல்லா நேரங்களிலும் நம்மிடம் கையில் பணம் இருக்குமா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி தான்.
அதை எதிர்கொள்ள முன்கூட்டியே சுதாரிப்பாக இருப்பது நல்லது தானே. அது தான் ‘எமர்ஜென்சி ஃபண்ட்’ என்று கூறப்படுகிறது.
உங்களின் மாதச்செலவு தொகையை 6-ஆல் பெருக்கி, அந்தத் தொகையை சேமித்து வையுங்கள். இதன் மூலம், எதிர்பாராத சூழல் ஏற்படும்போது, ஆறு மாதங்களுக்கு உங்களால் செலவுகளை எளிதாக கையாள முடியும்.
இந்த மாதச்செலவில் மளிகை செலவு, மருத்துவச் செலவு, கடன் தவணைகள், கல்விக்கட்டணங்கள் என அனைத்துமே அடங்கியிருக்க வேண்டும்.
இந்த எமர்ஜென்சி ஃபண்ட் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு இருப்பது நல்லது. அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு இருப்பது சூப்பர் நல்லது.
2. கோல்டு இ.டி.எஃப்
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. விரைவில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டிவிடும் போலும்.
அதனால், போனஸ் தொகையை கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்து வைக்கலாம்.
இதற்கு ஒரு கிராம் தொகையைத் தான் முதலீடு செய்ய வேண்டும்… ஒரு பவுன் தங்கத்தின் விலை தொகையைத் தான் முதலீடு செய்ய வேண்டுமென்பதில்லை.
கோல்டு இ.டி.எஃப்பை ரூ.100-ல் இருந்தே முதலீடு செய்யலாம்.

3. இன்சூரன்ஸ்
ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு மிக மிக முக்கியம். வீட்டில் சம்பாதிக்கும் நபருக்கு எதாவது அசம்பாவதிம் நேரும் நேரத்தில், இந்தக் காப்பீடுகள் வந்து குடும்பத்திற்கு ஆபத்பாந்தவனாக உதவும்.
இப்போது ஜி.எஸ்.டி 2.0 அமலில், தனிநபர் மருத்துவக் காப்பீடு மற்றும் தனிநபர் ஆயுள் காப்பீட்டிற்கு வரிகள் ஜீரோ சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இப்போது இந்தக் காப்பீடுகள் எடுத்தால், பிரீமியம் தொகை குறைவாகத் தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. தேசிய ஓய்வூதிய திட்டம்
ஓய்வுக்காலத்திற்கு பி.எஃப் மட்டும் போதுமா என்று கேட்டால், ‘இல்லை தான்’. அதனால், எக்ஸ்ட்ராவாக தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பணம் சேர்த்து வருவது நல்லது.
இதில் சொந்த தொழில் வைத்திருப்பவர்கள் கூட முதலீடு செய்யலாம்.
5. எஸ்.ஐ.பி
வீடு, வெளிநாட்டு ட்ரிப்… என அனைவருக்கும் ஏகப்பட்ட கனவுகள் இருப்பது சகஜம். ஆனால், அவற்றையெல்லாம் நினைத்த உடன் செய்துவிடுவது சிரமம்.
அதனால், அதை கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்து தான் செய்ய வேண்டும். அதை உண்டியலிலோ, ஆர்.டியிலோ சேர்ப்பதை விட, மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்குச்சந்தையில் எஸ்.ஐ.பியாக சேர்க்கலாம். இதில் வட்டியும் அதிகம். அதற்கேற்ற மாதிரி ரிஸ்க்கும் அதிகம். அதனால், இந்த முதலீட்டில் கொஞ்சம் கவனம் தேவை.
6. கடனை அடையுங்கள்…
போனஸ் பணத்தை வைத்து எதாவது கடனை அடைக்க முடியுமானால், தாராளமாக முதலில் அதைச் செய்யுங்கள். இது உங்களின் அடுத்தடுத்த மாதங்களின் நிதி சுமையைக் குறைக்கும்.

மொத்த தொகையையும் இதற்கே செலவளிக்க வேண்டுமா?
கையில் வாங்கிய மொத்த போனஸ் தொகையையும் இதற்கே செலவு செய்யுங்கள் என்று கூறவில்லை. அதில் ஒரு சிறிய பகுதியையாவது இதற்கு செலவு செய்யுங்கள்… ஒரு தொடக்கமாக மாற்றுங்கள். அதுவும் ஏதேனும் மேலே குறிப்பிட்ட ஒன்றில் முதலீடு செய்தாலே போதுமானது.
ஆனால், இதற்கு ஒரே ஒரு கண்டிஷன். இந்த முதலீட்டிற்கான தொகையை முதலில் எடுத்துவைத்து விட்டு, மீதத்தை ஷாப்பிங்கிற்கு செலவு செய்யுங்கள். அல்லது மொத்த தொகையுமே ஷாப்பிங்கிற்கே போய்விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
ஆக, தீபாவளியை நல்ல தொடக்கத்துடன் தொடங்குங்கள்…
அட்வான்ஸ் ஹேப்பி தீபாவளி!