
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து ரூ.60 கோடியை மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் 2015ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி தம்பதிக்கு தொழிலை விரிவுபடுத்த ரூ.60 கோடி கொடுத்தார்.
ஆனால் அந்தப் பணத்தை ராஜ் குந்த்ராவும், அவரது மனைவியும் தங்களது தொழிலை விரிவுபடுத்த பயன்படுத்தாமல் சொந்த தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டனர்.
அப்பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி தீபக் கோதாரி கேட்டார். ஆனால் ராஜ் குந்த்ரா பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தீபக் கோதாரி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜ் குந்த்ராவிற்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் ராஜ் குந்த்ரா கடந்த மாதம் போலீஸில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.
இதில் ரூ.60 கோடியில் குறிப்பிட்ட பகுதியை நடிகை பிபாஷா பாசு மற்றும் நேஹா துபியா ஆகியோருக்கு கட்டணமாக கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
5 மணி நேரம் நடந்த விசாரணையில் ராஜ் குந்த்ரா சில முக்கிய கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து போலீஸார் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜ் குந்த்ராவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் இப்போது இம்மோசடி தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸார் ஷில்பா ஷெட்டியின் இல்லத்திற்கு சென்று அவரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வாங்கினர்.
ஷில்பா ஷெட்டியின் விளம்பர கம்பெனி வங்கி கணக்கில் நடந்த பண பரிவர்த்தனைகள் குறித்து கேட்டறிந்தனர். இம்மோசடி தொடர்பாக ஷில்பா ஷெட்டி பல முக்கிய ஆவணங்களை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அவற்றை ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜ் குந்த்ராவின் வங்கிக்கணக்கில் இருந்து நடிகை ஷில்பா ஷெட்டி உட்பட 4 நடிகைகளின் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இம்மோசடியை தொடர்ந்து ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.