
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது ஷூவை எடுத்து வீசினார். ஆனால் அந்த செருப்பு தலைமை நீதிபதி மீது படவில்லை.
சனாதனத்தை அவமதிப்பவர்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியபடி இக்காரியத்தைச் செய்தார். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் விஷ்ணு சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,”தெய்வீக சக்தியால்தான் இது போன்று நடந்து கொண்டேன். நான் செய்த எனது செயலுக்காக எனது குடும்பத்தினர் வருத்தப்படலாம்.
நான் செய்த செயல் எனது குடும்பத்தினருக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால் எனது செயலுக்காக நான் சிறையில் இருக்க தயாராக இருக்கிறேன். விஷ்ணு சிலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துகளால் என்னால் தூங்கக்கூட முடியவில்லை.
இதுபோன்ற அவமானத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாள் இரவும் நான் எப்படி அமைதியாக இருக்க முடியும் என்று என் மனசாட்சி கேட்டுக்கொண்டிருந்தது.
அதோடு மொரீஷியஸில் தலைமை நீதிபதி இந்தியாவின் சட்ட அமைப்பு சட்டத்தின் ஆட்சியின் கீழ் செயல்படுகிறது, புல்டோசரின் ஆட்சியின் கீழ் அல்ல” என்று கூறியது எனக்கு அவர் மீது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.
தன் மீது செருப்பு வீசிய வழக்கறிஞர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிபதி கவாய் கேட்டுக்கொண்டார். இதனால் சுப்ரீம் கோர்ட் பதிவாளர் இது குறித்து போலீஸில் புகார் செய்யவில்லை.
அவரிடம் போலீஸார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு ராகேஷ் கிஷோரை போலீஸார் விடுவித்துவிட்டனர். ஆனால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.