
திருவனந்தபுரம்: கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளுக்கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்டது. இந்த சூழலில் துவார பாலகர் சிலைகளின் பீடங்களை காணவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
தங்க முலாம் பூசப்பட்ட பீடத்தை தேடி கண்டுபிடிக்க ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு நடத்திய விசாரணையில், தங்க முலாம் பூசப்பட்ட பீடம் மீட்கப்பட்டது. உயர் நீதிமன்ற விசாரணையில் துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. மொத்தம் 4 கிலோ தங்கம் மாயமாகி இருக்கிறது.