
நாகப்பட்டினம்/காரைக்கால்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேரை தாக்கி படகுகளில் இருந்த வலை உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த விக்னேஷ்(28), விமல்(26), சுகுமார்(31), திருமுருகன் (31), முருகன்(38), அருண்(27) ஆகிய 6 பேர் ஃபைபர் படகில் நேற்று முன்தினம் இரவு கோடியக்கரை கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர் 8 பேர், மீனவர்களின் படகில் ஏறி இரும்புக் கம்பி, கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்த வெள்ளி செயின், இன்ஜின், செல்போன், ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.