• October 7, 2025
  • NewsEditor
  • 0

“மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் 2026 பிப்ரவரிக்குள் குடமுழுக்கு நடத்தி விடுவோம்” என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம், ‘தீக்கிரையான வீரவசந்தராயர் மண்டபத்தை முழுமையாக சீரமைத்த பின்னர்தான் குடமுழுக்கை நடத்த வேண்டும்” என்று இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சேகர்பாபு – பி.மூர்த்தி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை கள ஆய்வு செய்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது,

“திருக்கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குடமுழுக்கு நடத்தப்படும். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சரின் அக்கறையால் இதுவரை 3,707 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இந்த ஆட்சியைத் தவிர, வேறு எந்த ஆட்சியிலும் குடமுழுக்குகள் நடைபெற்றதில்லை.

தமிழ்நாட்டிலுள்ள சுமார் 46,310 திருக்கோயில்களில் பல்வேறு கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, வயலூர் போன்ற முருகன் திருக்கோயில்களுக்கு வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

சேகர் பாபு

அந்த வகையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்குப் பணிகளை விரைவுபடுத்திட முதலமைச்சரிடம் இறையன்பர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மதுரையில் ஆய்வுக் கூட்டத்தினை நடத்தினோம்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்திட ரூ 23.70 கோடி மதிப்பீட்டில் 186 திருப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் திருக்கோயில் நிதி ரூ.8.90 கோடி மதிப்பீட்டில் 117 திருப்பணிகளும், உபயதாரர் நிதி ரூ.14.80 கோடி மதிப்பீட்டில் 69 திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்துப் பணிகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இறுதி வடிவம் பெறும்.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீவிபத்தினால் வீரவசந்தராயர் மண்டபத்தின் கட்டுமானங்கள் உருக்குலைந்தன. இதனை மறுசீரமைக்க 15 அடி நீளமுள்ள கருங்கல் தூண்கள் தேவைப்பட்டதால் மறுசீரமைப்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

தற்போது 15 அடி நீள கருங்கற்கள் கிடைக்கப்பெற்று பணி தொடங்கியுள்ளது. ரூ 35.30 கோடி மதிப்பீட்டில் வீரவசந்தராயர் மண்டபத்தின் மறுசீரமைப்பு பணிக்கு 79 கருங்கல் தூண்கள் தேவைப்பட்டன, அவற்றில் 40 தூண்கள் வரப்பெற்று, அதில் 10 தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் 11 தூண்களும் இங்கு வந்து சேரும்.

மீனாட்சியம்மன் கோயில்

வீரவசந்தராயர் மண்டபத்தினை தவிர்த்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தலாமா என்பதனை குடமுழுக்கில் தேர்ச்சிப் பெற்ற ஆகம வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து, முதலமைச்சரின் அனுமதி பெற்று வரும் டிசம்பர் மாதமே குடமுழுக்கு நடத்தி விடுவோம்.

வீரவசந்தராயர் மண்டபத்தோடு சேர்த்துதான் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தெரிவித்தால், வரும் 2026 பிப்ரவரி மாதத்திற்குள் குடமுழுக்கு பணிகள் நிறைவு பெறும்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் 18 உபக்கோயில்களில்  பலவற்றுக்கு ஏற்கனவே குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்திற்குள் 4 உபக்கோயில்களுக்கும் இதர கோயில்களுக்கும் வரும் 2026 பிப்ரவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தப்படும்.

தேர்தலுக்கும் எங்களது ஆன்மிகப் பணிக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. இந்த அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் கையாளுகின்ற அரசு.

பாலம் கட்டுகின்ற பணியால் மக்களே நடந்து செல்ல இயலாத இடமாக இருந்தபோதிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை சிறப்பாக நடத்தினோம்.

அந்த வகையில் குடமுழுக்கு பணிகளை அனைத்தையும் 3 மாதங்களுக்குள் முடித்துக் காட்டுவோம்” என்றார்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சில விஷயங்களை வலியுறுத்தியுள்ளது.

கோவையில் நடந்த இவ்வமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீக்கிரையான வீரவசந்தராயர் மண்டபத்தை முழுமையாக சீரமைத்து, கோயிலில் நூறு சதவிகித திருப்பணிகள் நிறைவடைந்த பின்னரே குடமுழுக்கை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *