• October 7, 2025
  • NewsEditor
  • 0

பால் ஏன் அவசியம் அருந்த வேண்டும்; அதில் என்னென்ன சத்துகள் உள்ளன; பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்கலாமா; பாலில் தண்ணீர் கலக்கலாமா; யாரெல்லாம் பாலைத் தவிர்க்க வேண்டும் என சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.

பால் ஏன் அவசியம்?

“மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு பால் இன்றியமையாத பங்காற்றுகிறது. கால்சியம், புரோட்டீன், பாஸ்பரஸ், கொழுப்புச்சத்து, வைட்டமின் டி, பி 12 உள்ளிட்ட பல்வேறு சத்துகள் பாலில் உள்ளன. இவை, எலும்புகள் மற்றும் பற்களின் உறுதித்தன்மைக்கும், சரும பொலிவுக்கும் பங்காற்றுகின்றன.

பசும்பாலில் 3 – 3.5 சதவிகிதம் கொழுப்புச்சத்தும், எருமைப்பாலில் 6 – 8 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் உள்ளன. அதிகமான கொழுப்புச்சத்து இருப்பதால், எருமைப்பால் செரிமானமாக கூடுதல் நேரமெடுக்கும்.

உடலுழைப்பு குறைவாக இருப்பவர்கள், அடிக்கடி எருமைப்பாலைப் பயன்படுத்தி வந்தால், உடல் பருமன், மந்தத்தன்மை உள்ளிட்ட சில சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

எனவே, எருமைப்பாலைத் தினமும் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அதேசமயம், கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால், பசும்பாலைத் தினமும் பயன்படுத்தலாம்.

கடைகளில் பல்வேறு விதமான கொழுப்புச்சத்து அளவுகளில் பால் விற்கப்படுகிறது. அதில், 3.5 சதவிகிதம் கொழுப்புச்சத்துள்ள பால் (Toned milk) தினசரி தேவைக்கு ஏற்றது.

எந்தப் பால் சிறந்தது?
எந்தப் பால் சிறந்தது?

மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு புரோட்டீன் சத்து மிகவும் முக்கியமானது. பருப்பு போன்ற புரோட்டீன் அதிகமுள்ள தானியங்களை, அரிசி போன்ற மாவுச்சத்து உணவுடன் சேர்த்துப் பயன்படுத்தினால்தான் முழுமையான பலன் கிடைக்கும்.

பாலில் திறன் வாய்ந்த புரோட்டீன் (High biological value protein) இருக்கிறது. இதனால், பாலை நேரடியாகவும் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், பிற உணவுகளுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

தலா 100 மில்லிலிட்டர் பசும்பால் மற்றும் எருமைப்பாலிலும், அதிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிரிலும் சராசரியாக 3.2 கிராம் புரோட்டீன் இருக்கிறது.

பால், தயிர், மோர், குறைவான அளவில் பனீர் என விருப்பமான உணவுப் பொருளாகத் தினமும் 400 மில்லிலிட்டர் அளவில் பால் உணவுகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

இதனால், தினமும் 12 கிராம் புரோட்டீன் கிடைக்கும். தயிரில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகளவில் இருக்கின்றன.

தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய 400 மில்லிலிட்டர் பால் உணவுகளில், குறைந்தபட்சம் 100 மில்லிலிட்டராவது தயிரைப் பயன்படுத்துவது நல்லது.

கூடுமானவரை, தயிரை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்துவது சிறந்தது.

milk
milk

கண்டிப்பாகக் கூடாது. பாலில் கிருமித்தொற்றுகள் எளிதில் ஊடுருவக்கூடும். பால் பண்ணை அல்லது பால் ஃபேக்டரியிலேயே பால் பதப்படுத்தப்பட்டு (Pasteurization), குளிர்விக்கப்படுகிறது.

இருப்பினும், அந்தப் பால் நம் பயன்பாட்டுக்கு வந்து சேரும் வரை போதிய அளவிலான குளிர்ச்சியுடன் இருப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, கடையில் வாங்கினாலும் சரி, வீட்டிலேயே பசு அல்லது எருமைகளை வளர்த்தாலும் சரி, பாலைக் காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும்.

வீடுகள் முதல் டீக்கடைகள் வரை பெரும்பாலான இடங்களிலும் பாலில் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

பாலிலுள்ள கொழுப்புச்சத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காகவும், செலவைக் குறைப்பதற்காகவும் பாலில் தண்ணீர் கலக்கப்படுகிறது.

பாலில் எந்த அளவுக்குத் தண்ணீர் சேர்க்கிறோமோ அந்த அளவுக்கு, அதிலுள்ள புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் உட்பட எல்லா சத்துகளுமே குறைய ஆரம்பிக்கும்.

இதனால், பாலில் இருந்து நமக்குக் கிடைக்கும் பயன்கள் முழுமையாகக் கிடைக்காது.

பால் சேர்த்த டீ
பால் சேர்த்த டீ

3 – 3.5 சதவிகிதம் கொழுப்புச்சத்துள்ள பாலைப் பயன்படுத்தும்பட்சத்தில், தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் காய்ச்சி குடிக்கலாம்.

‘அப்படியென்றால், பால் உணவுகள் எதிலுமே தண்ணீர் சேர்க்கக் கூடாதா?’ என்ற கேள்வி எழலாம். கூடுமானவரை தண்ணீர் சேர்க்காமல் பயன்படுத்தினால், எடுத்துக்கொண்ட பாலிலுள்ள சத்துகள் முழுமையாகக் கிடைக்கும்.

இதுவே, டீ அல்லது காபியில் டிகாக்‌ஷன் தயாரித்துப் பயன்படுத்தும்போது அதில் தண்ணீர் சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் டீ அல்லது காபியில் பாலுடன் தண்ணீர் கலந்திருக்கும். அதனால், எந்தச் சிக்கலும் இல்லை.

அதேசமயம், நாம் பயன்படுத்தும் ஒரு கப் டீ அல்லது காபியில் தண்ணீர் கலக்காத பால் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவு பாலுக்கு ஏற்ற சத்துகள் மட்டுமே நமக்குக் கிடைக்கும்.

பாலில் தண்ணீர் கலக்கலாமா?
பாலில் தண்ணீர் கலக்கலாமா?

பால் செரிமானமாக அதிக நேரமெடுக்கும். அப்போது, ‘பால் உணவுகள் வயதானவர்களுக்கு செரிமான பாதிப்பை ஏற்படுத்தாதா?’ என்ற கேள்வி வரக்கூடும். செரிமானம் என்பது வயதைப் பொறுத்தது அன்று.

மாறாக, அவரவர் உடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானமாகும் திறனைப் பொறுத்தது. வயதானவர்களுக்கு செரிமான பாதிப்புகள் இருந்தால், பால் உணவுகளைத் தவிர்க்கலாம்.

அல்லது, மோர் மட்டும் போதிய அளவில் கொடுக்கலாம். இதுவே, வயதானவர்களுக்கு செரிமான பாதிப்பு இல்லாத பட்சத்தில், பால், தயிர், மோர் போன்றவற்றை அவரவர் உடல் திறனுக்கு ஏற்ப கொடுக்கலாம்.

சர்க்கரை, உடல் பருமன் மற்றும் இதய பாதிப்பு உள்ளவர்கள் உட்பட எல்லோருமே பால் மற்றும் பால் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

பால் அலர்ஜி (Lactose intolerance) இருப்பவர்கள் மற்றும் செரிமான பாதிப்புள்ளவர்கள், பாலைத் தவிர்க்கலாம். அவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்படி, தயிர், மோர், பனீர் போன்ற பிற உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்” என்று முடித்தார் தாரிணி கிருஷ்ணன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *