
ராமேசுவரம்: ஊனம் தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடல் பகுதியை மாற்றுத் திறனாளி சிறுவன் 9 மணி நேரம் 11 நிமிடங்களில் நீந்திக் கடந்தார். சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பெரியார் செல்வன், பத்மப்பிரியா தம்பதியின் மகன் புவிஆற்றல் (12). முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். இவர் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியாவார்.
2022-ல் சென்னை ஷெனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலுடன், மாணவர் புவி ஆற்றல் நீச்சல் பயற்சியைத் தொடங்கினார். 2024-ல் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.