
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மாரிமுத்து. இவர் மானூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த வீரேஷ் இருளாயி தம்பதியினரின் மகளான சத்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் தற்போது கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். சத்யா தன் தாயான இருளாயி (70) உடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு குழந்தைகளில் ஒருவரை இருளாயி பராமரித்து வந்துள்ளார்.
தனது மாமியாரான இருளாயி வீட்டுக்கு சென்ற மாரிமுத்து தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இருளாயி குழந்தையை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து தனது மாமியார் இருளாயியை வயதான மூதாட்டி என்றும் பார்க்காமல் திடீரென அங்கிருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி இருளாயி தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நிலையில், உயிருக்கு போராடியவரை அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர், கிணற்றுக்குள் இறங்கி சுமார் அரை மணி நேரம் போராடி மூதாட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் இருளாயி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.