
கேரள மாநிலத்தில் அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லாட்டரி துறை சார்பில் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வாராந்திர லாட்டரி, விழாக்கால லாட்டரி என பல்வேறு வகையான லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துவருகிறது. அதில் ஓணம் லாட்டரியில் பம்பர் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சனிக்கிழமை கேரள மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் முன்னிலையில் லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெற்றது. அதில் TH 577855 என்ற எண்கொண்ட லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்தது. அந்த சீட்டு எர்ணாகுளம் நெட்டூரில் உள்ள லாட்டரி சீட்டு ஏஜெண்ட் லதீஸ் என்பவர் விற்பனை செய்திருந்தார். ஆனால் அந்த சீட்டை வாங்கியவர் யார் என்ற தேடல் கடந்த இரண்டு நாள்களாக இருந்தது. இந்த நிலையில் நெட்டூரில் பெயின்ட் விற்பனை நிறுவன ஊழியரான சரத் எஸ்.நாயர் என்பவருக்கு ரூ.25 கோடி ஓணம் பம்பர் பரிசு விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இன்று துறவூர் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் பரிசு விழுந்த லாட்டரி சீட்டு மற்றும் தனது வங்கி பாஸ்புக் ஆகியவற்றை ஒப்படைத்தார் சரத் எஸ்.நாயர்.
இதுபற்றி சரத் எஸ்.நாயர் கூறுகையில், “எப்போதாவது லாட்டரி எடுக்கும் பழக்கம் உண்டு. இப்போதுதான் பம்பர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஓணம் லாட்டரி குலுக்கல் நடைபெற்ற சமயத்தில் நான் நெட்டூரில் உள்ள பெயின்ட் விற்பனைக்கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். லாட்டரி முடிவுகள் வெளியானதும் எனது மொபைலில் போட்டோ எடுத்து வைத்திருந்த லாட்டரிச் சீட்டின் எண்ணை சரிபார்த்தேன். நான் எடுத்த லாட்டரிச் சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது தெரியவந்தது. ஆனாலும், வீட்டுக்கு போன் செய்து மனைவியிடம் லாட்டரி சீட்டில் உள்ள எண்ணை சரிபார்க்கச் சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டேன். அதன்பின்னர், அவசரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பர்மிசன் கேட்டுவிட்டு கடையில் இருந்து கிளம்பினேன்.

வீட்டுக்குச் சென்று ஒரிஜினல் டிக்கெட்டை நேரில் பார்த்து மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன். வெளியில் யாரிடமும் கூறவில்லை. என் அப்பா, அம்மா, மனைவி, சகோதரன், குழந்தை ஆகியோருக்கு மட்டுமே தெரியும். இன்று சகோதரருடன் வங்கிக்குச் சென்று லாட்டரி சீட்டை ஒப்படைத்தேன். நான் வீடு கட்டியதில் சிறிது கடன் உள்ளது. அதை அடைக்கவேண்டும். குடும்பத்தினருடன் ஆலோசித்து பரிசுத்தொகையை எப்படி பயனுள்ள வகையில் செலவிடுவது என முடிவு செய்வேன்” என்றார்.
சரத் எஸ்.நாயர் கடந்த 12 ஆண்டுகளாக பெயின்ட் கடையில் வேலை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.