
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்துள்ள கல்லத்திகுளம் பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் மின் ஆலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சோலார் மின் ஆலை அமைப்பதனால் வெப்ப சலனம் காரணமாக பொது மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதி வன கட்டுப்பாட்டில் இருக்க கூடிய நிலையில் ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. வன உயிரினங்களான மான்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது என இந்த மின் ஆலை அமைப்பதற்கு தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதி மக்களைக் கண்டு கொள்ளாமல் ஒடுக்குமுறை செய்து தங்களை மறைமுகமாக இடம்பெறச் செய்யும் நோக்கத்தில் செயல்படுவதாக கூறி காவல் துறையிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஐந்து பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். மனுவை பெற்ற ஆட்சியர் கமல் கிஷோர் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை எனவும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென 8 நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போர்க்களம் போல் காட்சியளித்தது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் பூட்டப்பட்டது. பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோரை கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.