
மனிதன் விண்வெளிக்கு பயணம் செய்யத் தொடங்கியது முதல் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் திட்டங்கள் வரை விண்வெளிப் பயணங்களுக்கு என சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஒருவேளை, விண்வெளிப் பயணத்தின்போது ஒரு வீரர் உயிரிழந்தால், அவரது உடலை என்ன செய்வார்கள் என்பது பலரும் அறியாத ஒரு விஷயமாகும். இதற்கான நெறிமுறைகளை நாசா வகுத்துள்ளது.
நாசாவின் தலைமை மருத்துவ அதிகாரியின் கூற்றுப்படி, விண்வெளியில் ஏற்படும் உயிரிழப்புகளைக் கையாள சில நெறிமுறைகள் உள்ளன. இந்த விதிகள், மரணம் நிகழும் இடத்தைப் பொறுத்து மாறுபடும்.
ஒரு வீரர் நிலவுப் பயணத்தின்போது உயிரிழந்தால், அவரது உடலை பூமிக்குத் திரும்பக் கொண்டு வருவது எளிது. சில நாட்களிலேயே பூமிக்குத் திரும்பிவிட முடியும் என்பதால், உடலை ஒரு பையில் வைத்து பூமிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.
ஆனால் செவ்வாய் கிரகப் பயணம் என்பது பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடிக்கும் ஒரு நீண்ட பயணம். பயணத்தின் நடுவில் ஒருவர் உயிரிழந்தால், பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு பூமிக்குத் திரும்புவது சாத்தியமற்றது.
எனவே அந்த வீரரின் உடலை ஒரு பையில் அல்லது விண்கலத்தின் ஒரு தனி அறையில் வைத்துப் பாதுகாப்பார்கள். விண்கலத்தின் சீரான வெப்பநிலை,ஈரப்பதம், உடலை பூமிக்குத் திரும்பும் வரை பாதுகாக்க உதவும்.
விண்வெளியில் ஒருவரின் உடலை எரிப்பது (Cremation) சாத்தியமில்லை. அதேபோல, நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்திலோ உடலைப் புதைக்கவும் முடியாது. பூமியைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் மற்ற கிரகங்களின் சூழலை மாசுபடுத்தும் அபாயம் இருப்பதால் இது ஒரு உயிரியல் ஆபத்தாகக் கருதப்படுகிறது.
ஒரு வீரரை இழப்பது என்பது சக வீரர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே உயிரிழந்த வீரரின் உடலைக் கையாள்வதோடு, சக வீரர்களுக்கும் பூமியில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய உளவியல் ஆதரவை நாசா வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.