
அடுத்த சில மாதங்களுக்கு அனல் பறக்கும் தேர்தல் அரசியல் நம்மை தகிக்க வைக்கப் போகிறது. இந்த தகிப்பில் கட்சிகளில் நடக்கும் உள்குத்து விவகாரங்களையும் கொஞ்சம் தெறிக்க விடுவோமா? சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் தொடங்கிய புதிய கட்சியின் தேர்தல் பயணம், கரூர் சம்பவத்தால் சமூக வலைதளங்களுக்குள் மட்டும் சுருங்கிக் கிடக்கிறது. ஆனாலும், பொதுவெளியில் அந்தக் கட்சிதான் பேசுபொருளாகிப் போனது.
எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல, இப்போது ஏற்பட்டுள்ள இக்கட்டில் இருந்து எப்படி மீள்வது என்பதில்தான் புதிய கட்சியி்ன் தலைவர் தீவிரம் காட்டுகிறாராம். கரூர் சம்பவத்தை வைத்து புதியவரை தங்கள் கைக்குள் கொண்டு வந்துவிடலாம் என ஆளும் தேசிய கட்சி வலை விரித்துக் கொண்டிருக்கிறது. கொள்கை எதிரி என அடையாளப்படுத்திவிட்டு, அவர்களோடு கைகோர்த்தால் சரிப்பட்டு வராது என நினைக்கிறாராம் புதிய தலைவர்.