
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சர்வதேசப்போட்டிகளில் விளையாடத் தொடங்கிய காலகட்டத்தில் தோனி வழங்கிய குட்டி அறிவுரை, எப்படி அவர் வெற்றியிலும் தோல்வியிலும், அதிக விமசர்சனங்களையும் பாராட்டுகளையும் எதிர்கொள்ளும்போது பணிவாக இருக்கக் கற்றுத்தந்தது எனக் கூறியிருக்கிறார்.
இன்று இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளராகத் திகழும் சிராஜ் அவரது கரியரின் ஆரம்பகாலத்தில் அதிகம் நகைக்கப்பட்டார். குறிப்பாக 2018ம் ஆண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடியபோது அதிகப்படியான ட்ரோல்களை எதிர்கொண்டார். சிலர் அவரது தந்தையின் தொழிலை வைத்துகூட கேலி செய்தனர்.
இவற்றை எதிர்கொண்டது குறித்து, “இந்திய அணியில் நான் சேர்ந்தபோது தோனி என்னிடம், ‘மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்ளாதே. நீ நன்றாக விளையாடும்போது மொத்த உலகமும் உன்னுடன் இருக்கும். நீ சரியாக விளையாடவில்லை என்றால் மொத்த உலகமும் தவறாக பேசும்’ என்றார்.

ட்ரோலிங் மோசமானது. நாம் நன்றாக விளையாடும்போது ரசிகர்களும் ஒட்டுமொத்த உலகமும் ‘சிராஜை போல வேறொரு பௌளர் கிடையாது’ என்பார்கள். அடுத்தபோட்டியே சரியாக விளையாடவில்லை என்றால், ‘உன் அப்பாவுடன் சேர்ந்து ஆட்டோ ஓட்ட போ’ என்பார்கள் – இதில் என்ன விஷயம் இருக்கிறது?
நீங்கள் ஒரு மேட்சில் ஹீரோவாக இருப்பீர்கள் அடுத்தப்போட்டியிலேயே ஜீரோ ஆகிவிடுவீர்கள். மக்கள் அவ்வளவு வேகமாக மாறிவிடுகிறார்களா? நான் எனக்குள் முடிவு செய்தேன். எனக்கு வெளிப்புறத்தில் பாராட்டும் கருத்துக்களும் வேண்டாமென நினைத்தேன். என் குடும்பமும் என் அணியின் சக வீரர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியம் என முடிவு செய்தேன், இவர்கள்தான் முக்கியமானவர்கள். மற்றவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலைக் கிடையாது.” என்றார் சிராஜ்.