
சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (அக்.9) கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது குறித்து சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் மற்றும் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், பணிபுரியும் ஊழியர்களுக்கான ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு சார்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.