
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கறிஞர், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முயன்றார். இதனையடுத்து, “இவை எல்லாம் என்னைப் பாதிக்காது. விசாரணையைத் தொடருங்கள்” என்று தெரிவித்த கவாய் அமைதியாக விசாரணையைத் தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஒரு வழக்கின் விசாரணையை தொடங்கியபோது, அவர் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணியை வீச முயன்றார். ஆனால், அமர்வின் முன்னாலேயே விழுந்தது. இந்த சம்பவம் காரணமாக அங்கே பரபரப்பு ஏற்பட்டது. காலணியை வீசிய ராகேஷ் கிஷோர் உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது" என்று கூச்சலிட்டார்.