• October 6, 2025
  • NewsEditor
  • 0

சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 22.7 லட்சம் மக்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த 2020 தேர்தலின்போது காங்கிரஸ் நெருங்கிய போட்டி அளித்த 59 தொகுதிகளைக் குறிவைத்து SIR மூலம் இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது.

SIR-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டம்

முன்னதாகக் கூறிவந்த வாக்குத் திருட்டு (Vote Chori) குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தும் காங்கிரஸ், தலித் மற்றும் இஸ்லாமியப் பெண்களின் வாக்குகள் மட்டுமே திட்டமிடப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்,

“பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சமீபத்திய சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் போது, மொத்தம் 22.7 லட்சம் தலித் மற்றும் முஸ்லிம் பெண்களின் பெயர்கள் திட்டமிட்ட வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்பது மிகப் பெரிய ஜனநாயக அவலமாகும்.

இது வெறும் தவறோ அல்லது அலட்சியமோ அல்ல, மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பறிக்கும் பெரும் அரசியல் குற்றச்செயல் ஆகும்.”

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

தன்னிச்சையாகவும், நடுநிலையாகவும் செயல்பட வேண்டிய இந்திய தேர்தல் ஆணையமே ஒன்றிய பாஜக அரசின் அரசியல் விளிம்பில் சிக்கி, “SIR” என்ற குறியீட்டின் பெயரில் வாக்காளர்களை சமூக அடிப்படையில் பிரித்து நீக்கியிருப்பது, அரசியல் நயவஞ்சகத்திற்கும் அரசியலமைப்பை அவமதிப்பதற்கும் உச்சமான சான்று ஆகும்.

தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆகியோரின் வாக்குரிமையை மறுக்கும் இந்த செயல், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்ற இந்திய அரசியலமைப்பின் மூலத்தத்துவங்களுக்கு நேரான துரோகமாகும்.

மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல், “இந்தியா மக்களின் குரலில் உயிர்பெற்றது; அதிகாரத்தின் குரலில் அல்ல.” அந்த மக்களின் குரலையே இவ்வாறு மௌனப்படுத்தும் முயற்சி, ஜனநாயகத்தை அழித்து, அதிகாரத்தை அடிமைப்படுத்தும் பாசிச முயற்சியாகும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்திய தேர்தல் ஆணையம் இச்சம்பவம் குறித்து உடனடியாக விளக்கம் அளித்து, வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும் மீட்டமைக்க வேண்டும். அதோடு, இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த ஜனநாயக விரோத செயல்களை கடுமையாகக் கண்டிக்கிறது.‌ வாக்குரிமை என்பது குடிமக்களின் உயிர்நாடி; அதை வெட்டி ஆட்சி நடத்த முடியாது. மக்கள் தான் இறுதி அதிகாரம். மக்கள் தான் ஜனநாயகம். மக்கள் தான் இந்தியா.

இந்தியாவை பாகுபாடு அல்ல, அன்பு காக்கும்.

அதிகாரம் அல்ல, உண்மை நிலைக்கும்.

அராஜகம் அல்ல, ஜனநாயகம் வெல்லும்.” எனக் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *