• October 6, 2025
  • NewsEditor
  • 0

மும்பை மாநகராட்சி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது.

இத்தேர்தல் கடந்த மூன்று ஆண்டுகளாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. மும்பை மாநகராட்சியை கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனாதான் ஆட்சி செய்து வந்தது. ஆனால் இப்போது சிவசேனா இரண்டாக உடைந்து விட்டதால் மீண்டும் மும்பை மாநகராட்சியை சிவசேனா பிடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறது.

ராஜ்-உத்தவ் தாக்கரே

மாநகராட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்க மாட்டோம் என்றும், வெற்றி பெறுபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துவிட்டார்.

இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இத்தேர்தலில் அதிக வார்டுகளில் போட்டியிடாது என்பது தெளிவாகிவிட்டது.

மும்பை மாநகராட்சியைப் பிடிப்பது பா.ஜ.கவின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது. சிவசேனா உடைந்திருக்கும் இந்த நேரத்தில் மும்பையைப் பிடித்துவிடவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது.

அதேசமயம் மும்பையை விட்டுவிடக்கூடாது என்பதில் உத்தவ் தாக்கரேயும் உறுதியாக இருக்கிறார். இதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பது போல் அவரது செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருந்த தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயுடன் முதல்முறையாக உத்தவ் தாக்கரே தொடர்பு கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

இந்தி திணிப்புக்கு எதிராக முதல்முறையாக இரண்டு பேரும் சேர்ந்து குரல் கொடுத்தனர். அதுவே நாளடைவில் அவர்களுக்கு இடையே அரசியல் ரீதியிலான நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே
ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே

2 மாதத்தில் 5 முறை சந்திப்பு

கடந்த இரண்டு மாதத்தில் அடிக்கடி உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு முதல்முறையாக ராஜ் தாக்கரே சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ராஜ் தாக்கரே இல்லத்திற்கு உத்தவ் தாக்கரே கணபதி விழாவையொட்டி அடுத்தடுத்து இரண்டு முறை சென்று சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு அவர்களுக்கு இடையே இருந்த அரசியல் வேறுபாடுகளைக் களையத் துணையாக இருந்தது.

இதையடுத்து மும்பை மற்றும் நாசிக் உட்பட சில மாநகராட்சிகளில் சிவசேனா(உத்தவ்), நவநிர்மாண் சேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையில் இரு தலைவர்களும் நேரடியாக பங்கெடுத்து வருகின்றனர்.

நேற்று உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் பேத்தியின் திருமணம் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் நடந்தது. இதில் இரண்டு தாக்கரேக்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் சர்வசாதாரணமாக நின்று பேசிக்கொண்டிருந்த வீடியோக்கள் வெளியானது.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு ராஜ் தாக்கரே நேரடியாக தாதரில் உள்ள தனது வீட்டிற்கு செல்லாமல் பாந்த்ராவில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்றார்.

உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே
உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே

அங்கு இரண்டு பேரும் அரை மணி நேரத்திற்கும் மேலாக தனி அறையில் சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டனர்.

இந்த தொடர் சந்திப்புகள் வரும் மாநகராட்சி தேர்தலில் அவர்களது கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை உறுதிபடுத்துவதாக இருக்கிறது.

அதேசமயம் தற்போது உத்தவ் தாக்கரே கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சிகள் அச்சம் அடைந்துள்ளது.

இரு கட்சிகளும் தங்களுக்குறிய பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்று அச்சம் அடைந்துள்ளன. அக்கட்சிகளிடம் கலந்து ஆலோசிக்காமலேயே ராஜ் தாக்கரேயுடன் கூட்டணி வைக்க உத்தவ் தாக்கரே பேச்சு நடத்தி வருகிறார்.

இது குறித்து உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகி அனில் பரப்பிடம் பேசியபோது, ”உறவினர்கள் என்பதால் இருவரும் சந்தித்துபேசிக்கொள்கின்றனர். தேர்தல் வரும் போது கூட்டணி கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி தலைமை முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தார். கடந்த இரண்டு மாதத்தில் தாக்கரே சகோதரர்கள் 5 முறை சந்தித்து பேசி இருக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *