
மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் `பைசன்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸாக திரைக்கு வருகிறது.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி எனப் பலரும் படத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
மாரி செல்வராஜுடன் புதிய காம்போவாக கைகோர்த்து நிவாஸ் இசையமைத்திருக்கும் பாடல்களுக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்படத்தின் புரொமோஷன் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இங்கு துருவ் விக்ரம், “இதுவரைக்கும் நான் ரெண்டு படம் நடிச்சிருக்கேன். ரெண்டு படமும் நீங்க பார்க்கலைனா கூட பரவால்ல, நோ ப்ராப்ளம். இந்த படம் நீங்க கண்டிப்பா பார்க்கணும், இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் படம். இந்த படத்தை நான் அப்படித்தான் பார்க்கிறேன். நீங்களும் அப்படித்தான் பார்ப்பீங்கன்னு நம்புறேன்.
நான் இந்த படத்துக்காக என்னோட 100 சதவிகித உழைப்பைக் கொடுத்திருக்கேன்னு நம்புறேன். தியேட்டர்ல பார்க்கும்போது அந்த 100% எஃபெக்ட் தெரியுதான்னு நீங்க தான் முடிவு பண்ணனும்.

ஆனா என்னையும் தாண்டி, எங்க எல்லாரையும் தாண்டி, எங்க டைரக்டர் மாரி செல்வராஜ் ரொம்ப இறங்கி கஷ்டப்பட்டு ஒரு சம்பவம் பண்ணியிருக்காரு. பயங்கரமா கஷ்டப்பட்டு இந்த படத்தை ரெடி பண்ணியிருக்காரு.
நான் இப்போ ஒரு நடிகர் கிடையாது. இப்ப நான் ஒரு கபடி பிளேயர்தான். படத்துக்காக நான் கபடி கத்துக்கிட்டதுபோது ரொம்ப முக்கியமான ஒரு மேட்ச் ஆடப் போறோம்னு தான் தோணுச்சு.” என்றார்.
ரஜிஷா விஜயன் பேசுகையில், “மாரி சார் கூட என்னோட செகண்ட் ஜர்னி. தமிழ்ல என்னை அறிமுகப்படுத்தியது மாரி சார்தான். கர்ணன்ல நடிச்சிருந்தேன், இப்போ `பைசன்’ படத்துல வந்திருக்கேன்.
நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். இது ஒரு அழகான படம். மேலும் சில சிறந்த மனிதர்களுடன், குறிப்பாக துருவ், அனுபமாவுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
படத்திற்குப் பிறகு எனக்கு நல்ல நண்பர்களாக அவங்க கிடைத்திருக்காங்க. பெரிய கிரெடிட்ஸ் மாரி சாருக்குதான். ரொம்ப முக்கியமான கதையை இவ்வளவு அன்போட பண்ணியிருக்காங்க.

அதுல ஒரு பகுதியாக இருப்பதற்கு எனக்கும் ஒரு லக் கிடைச்சிருக்கு. நம்ம ஒரு ஆக்டரா இருக்கும் பயணத்துல அவார்ட்ஸ் வந்திருக்கலாம். நிறைய பாராட்டுகள் வந்திருக்கலாம்.
ஒரு ஆர்டிஸ்ட்க்கு அதிகமான சந்தோஷம் கிடைக்கிறது இரண்டு விஷயத்துல, ஒன்று ஆடியன்ஸ் கொடுக்கிற லவ், அந்த அன்பு. அப்புறம் இரண்டாவது, டைரக்டர் ஓட நம்பிக்கை. ‘உங்களை நம்புறேன்’னு மாரி சார் என்னை மீண்டும் கூப்பிட்டிருக்கார்.
இந்த படத்துல என்னோட கேரக்டர் பற்றி சொல்ல முடியாது, ஆனா ரொம்ப முக்கியமான கேரக்டர்.” என்று முடித்துக் கொண்டார்.