• October 6, 2025
  • NewsEditor
  • 0

கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி த.வெ.க கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பலரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதோடு, விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் இன்னொரு பக்கம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் (National Commission for Scheduled Castes ) தலைவர் கிஷோர் மக்வானா விசாரணை நடத்தினார்.

அதோடு, கரூரில் நடைபெற்ற த.வெ.க பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (National Commission for Scheduled Castes) நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டது.

கரூர்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு

இறந்தவர்களில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த சம்பவத்தில் அதிகளவில், பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்கள் உயிரிழந்ததால் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர் கரூர் வந்தடைந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்த இடமான வேலுசாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதி மக்களிடம் சம்பவத்தை நேரில் கண்டவை குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவரிடம் நலம் விசாரித்து, அவரிடம் சம்பவம் எவ்வாறு நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி பட்டியலின அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஏமூர் புதூர் கிராமத்திற்குச் சென்ற அவர்கள், அங்கு நெரிசலில் சிக்கி உயிரிழந்த அருக்காணியின் குடும்பத்தினர் உள்ளிட்ட 5 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் துயர சம்பவம்
கரூர் துயர சம்பவம்

அதேபோல், இந்த சம்பவத்தில் உயிரிழந்த உப்பிடமங்கலம் பகுதியில், உயிரிழந்த கோகுலஸ்ரீ என்ற சௌந்தர்யா(வயது: 27), அரவக்குறிச்சி தொக்குப்பட்டி அஜிதா(வயது: 21), புதுப்பட்டி சேந்தமங்கலம் பிருந்தா (வயது: 22), கரூர் வேலுசாமிபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர் தேவேந்திரன் மனைவி சுகன்யா(வயது: 33) உள்ளிட்ட உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினர்.

அதோடு, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், கரூர் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் புவித்தா உள்ளிட்டவர்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, விவரங்களை கேட்டறிந்தார்.

இந்நிலையில், இந்த விசாரணை முடிவில் பட்டியலினத்தைச் சேர்ந்த 13 பேர் குடும்பத்திற்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் சார்பில் நிதி உதவி வழங்கப்படுவதுடன், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் பரிந்துரைக்கப்படும் என கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *