• October 6, 2025
  • NewsEditor
  • 0

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

அவசர சிகிச்சை பிரிவில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தீவிபத்து ஏற்பட்டவுடன் அவசர சிகிச்சை பிரிவு இருந்த மாடி முழுக்க புகைமண்டலமாக மாறியது.

இதனால் நோயாளிகளால் வெளியில் செல்ல முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனாலும் மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீவிபத்து ஏற்பட்ட மாடியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.

ராஜஸ்தான்: அரசு மருத்துவமனையில் தீவிபத்து

அப்படி இருந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 8 நோயாளிகள் மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீ மற்ற மாடிகளுக்கு பரவுவதற்குள் அணைத்தனர்.

ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த முக்கிய ஆவணங்கள், மருத்துவ உபகரணங்கள், ரத்த மாதிரிகள் எரிந்து போனது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்யும் விகாஷ் கூறுகையில், ”நாங்கள் ஆபரேசன் தியேட்டரில் இருந்தபோது தீவிபத்து குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே நோயாளிகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கு ஓடினோம்.

ஆனால் எங்களால் 3 நோயாளிகளைத்தான் காப்பாற்ற முடிந்தது. அதற்குள் தீயின் அளவு அதிகரித்துவிட்டது. இதனால் எங்களால் உள்ளே நிற்க முடியவில்லை.

சடலம்
தீவிபத்தில் 8 நோயாளிகள் பலி

கடுமையான புகைமண்டலமாக இருந்ததால் பின்னர் வந்த போலீஸாரால் உள்ளே செல்ல முடியவில்லை. தீயணைப்பு துறையினர் வந்தபோது ஒட்டுமொத்த கட்டிடமும் புகைமண்டலமாக நிரம்பி இருந்தது. இதனால் கட்டிடத்தின் ஜன்னலை உடைத்து அந்த வழியாக தீயை அணைக்க ஆரம்பித்தனர்” என்றார்.

முதல்வர் பஜன்லால் சர்மா மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை பார்வையிட்டார். அவரிடம் தீவிபத்தின்போது மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவிட்டதாக நோயாளிகள் குற்றம் சாட்டினர்.

இம்மருத்துவமனை தீவிபத்தில் தனது தாயாரை இழந்த நரேந்திர சிங் இது குறித்து கூறுகையில், ”எனது தாயாரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்திருந்தோம். நான் சாப்பிடுவதற்காக கீழே இறங்கி வந்தேன். அந்த நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க எந்தவித சாதனங்களும் இல்லை” என்றார்.

நோயாளிகளை அவர்களது உறவினர்களே தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து மீட்க வேண்டிய நிலையில் இருந்ததாக மற்றொரு உறவினர் புரன்சிங் தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *