
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை நன்றாக நடந்து வருகிறது என்று இரு தரப்புகளிலிருந்தும் சிக்னல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.
ஜெய்சங்கர் பேச்சு
இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடலின் போது பேசிய அவர், “நமக்கு அமெரிக்காவுடன் இப்போது பிரச்னை உள்ளது. இதற்கான முக்கிய காரணம் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்பதுதான். இந்தத் தாமதம்தான் இந்தியா மீது வரி விதிக்க காரணமாக அமைந்தது.
கூடுதலாக, ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்குவதால் இந்தியா மீது இன்னொரு வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதை நாம் ‘நியாயமற்றது’ என்ற பொதுவெளியிலேயே கூறி வருகிறோம்.
ரஷ்யாவுடன் விரோதமாக இருக்கும் நாடுகள் உள்பட பல நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகின்றன. இருந்தும், இந்தியா மீது இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் ஏற்பட்டுவிடும் தான்
என்ன தான் நடந்தாலும், கடைசியில், அமெரிக்காவுடன் இந்தியாவிற்கு வர்த்தகப் புரிந்துணர்வு ஏற்படத் தான் போகிறது.
ஏனெனில் அது உலக அளவில் மிகப்பெரிய சந்தை மற்றும் பிற நாடுகளுமே அமெரிக்காவுடன் இந்தப் புரிந்துணர்விற்கு வந்துவிட்டன.
ஆனால், வர்த்தக விஷயத்தில் சில அடிப்படைகள் மற்றும் சிவப்பு கோடுகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும்.
எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், அதில் சில விஷயங்கள் பேச்சுவார்த்தை நடத்தக்கூடியதாக இருக்கும். சில பேச்சுவார்த்தை நடக்க முடியாததாக இருக்கும். அது மதிக்கப்பட வேண்டும். இந்தியா அதில் மிகத் தெளிவாக இருக்கிறது.

சில பிரச்னைகள்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தை விரைவில் ஒப்பந்தத்தை அடைவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்தப் பேச்சுவார்த்தையில் சில பிரச்னைகள் இருக்கின்றன. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்னைகள் ஆலோசித்து தீர்க்கப்பட வேண்டும். அதை செய்யத்தான் நாம் முயன்று கொண்டிருக்கிறோம்.
இந்தப் பிரச்னைக்குள் இன்னும் பெரிதாகப் போக விரும்பவில்லை. காரணம், சில துறைகளில் இரு நாடுகளின் உறவுகள் எப்போதும்போல தொடர்ந்து வருகின்றன. சில துறைகளில் இன்னும் வலுவாக வளர்ந்து வருகின்றன” என்று பேசியுள்ளார்.