
ஈசனும் அம்பிகையும் தேசம் முழுவதும் பல்வேறு தலங்களில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். அப்படிப்பட்ட சுயம்புத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானது. நம் பாவங்களை எல்லாம் போக்கக்கூடியது. மேலும் வேண்டும் வரங்களையும் நமக்கு வாரி வழங்குவது. அப்படிப்பட்ட ஒரு தலம்தான் வீரபாண்டி.
தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் இந்த ஊரில்தான் அம்பிகை சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறாள். இங்கே அம்பிகையின் திருநாமம் கௌமாரி என்பது. மேலும் இவள் கன்னித் தெய்வமாக அருள்பாலிக்கிறாள்.
இத்தலத்தின் சிறப்புகளில் மற்றொன்று இங்கே அம்பிகை பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஈசனின் சந்நிதி. இந்த ஈசனுக்கு கண்ணீசர் என்பது திருநாமம். வாருங்கள்.
வைகை ஆற்றின் கிளை நதியான முல்லையாற்றங்கரையில் கோயில் கொண்டிருக்கும் கௌமாரியின் திருத்தல மகிமையை அறிந்துகொள்வோம்.
பார்வை பெற்ற பாண்டிய மன்னன்.
மதுரையை ஆண்ட வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னனுக்கு திடீரெனக் கண்பார்வை பறிபோனது. வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் பார்வை மீளவில்லை.
அப்போது அவன் கனவில் தோன்றிய அம்பிகை தன் தலத்துக்கு வந்தால் கண்பார்வை கிடைக்கும் என்றாள். கனவில் இருந்து விழித்தெழுந்த மன்னன், எந்தத் தலம் என்பது அறியாமல் ஒவ்வொரு தலமாகச் சென்று ஈசனையும் அம்பிகையையும் தொழுதுவந்தான்.
அம்பிகை கௌமாரியாக வீற்றிருக்கும் தலத்துக்கு வந்து கண்ணீசரை வணங்கி அம்பிகையைத் தொழுதபோது கண்பார்வை மீண்டும் வந்தது.
மன்னன் மனம் மகிழ்ந்து அதற்குக் காணிக்கையாக கோயிலைப் புதுப்பித்துக் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. பாண்டிய மன்னன் அருள்பெற்ற தலம் இது என்பதால் வீரபாண்டி என்றே இந்த ஊருக்கும் பெயர் ஆனது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், இவ்வழியாகச் சென்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவர், அம்மை நோயால் பீடிக்கப்பட்டு துன்பப்பட்ட போது, இத்திருத்தலத்துக்கு வந்து வணங்கி நலம் பெற்றதால், ஆற்றங்கரையில் பாலம் கட்ட உத்தரவு பிறப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இன்றைக்கும் அம்மை நோயால் பீடிக்கப்பட்டவருக்கு, அம்பாள் முன் படைக்கப்பட்ட தீர்த்தத்தைக் கொடுக்க, ‘அம்மை நோயின்’ சீற்றம் குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
தல வரலாறு
வைகை வனத்தில் கொடிய அரக்கன் ஒருவன் வாழ்ந்துவந்தான். அவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் மிகுந்த தொந்தரவு கொடுத்து வேள்விகள், ஆராதனைகள் எதுவும் நடக்க முடியாமல் தடுத்துவந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி இந்த வனத்திற்கு வந்தாள்.
வந்த இடத்தில் சிவபூஜை செய்ய வேண்டி ஒரு லிங்கத் திருமேனியைப் பிடித்துவைத்து பூஜை செய்ய ஆரம்பித்தாள். அந்த ஈசனுக்குக் கண்ணீசுவரர் என்கிற திருநாமம் இட்டு வழிபட்டாள்.
அப்போது அங்கு வந்த அசுரன் பார்வதி தேவியின் பூஜையைக் கலைக்க முயன்றான். அவளை அங்கிருந்து அப்படியே தூக்கிச் செல்ல முயல ஆத்திரம் கொண்ட தேவி, கையில் பூஜைக்காக வைத்திருந்த அருகம்புல்லை அவனை நோக்கி வீசினாள்.

அம்பிகையின் அருளால் அருகம்புல் அம்பு ஆனது. அரக்கனை இரு துண்டுகளாகப் பிளந்தது. அரக்கன் மாண்டு போனான். இதனால் மகிழ்ந்த தேவர்கள் பார்வதியை கன்னித்தெய்வமாக்கி ‘கௌமாரி’யாக அத்தலத்திலேயே கோயில்கொண்டு அனைவருக்கும் அருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள தேவி அங்கேயே சுயம்புவாக எழுந்தருளிக் கோயில்கொண்டாள் என்கிறது தலபுராணம்.
குழந்தை வரம் தருவாள் – குடும்ப நலம் காப்பாள்
இந்த அம்பிகை கன்னி தெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறாள் என்பதால் இவளிடம் கேட்ட வரம் உடனே கிடைக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து, முல்லை நதியில் தீர்த்தமாடி, அங்கப்பிரதட்சிணம் செய்து, இங்குள்ள வேப்பமரத்தில் தொட்டில் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
அதேபோன்று குடும்பத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருப்பவர்கள், சித்திரைத் திருவிழாவின்போது, தீச்சட்டி ஏந்தி வலம் வந்து வழிபட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி நிம்மதி ஏற்படுவதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள்.
மாதம்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புதிதாகத் திருமணம் ஆனவர்கள், திருமாங்கல்யத்தை அம்பாள் முன் சாற்றி வழிபட்டு, புது மாங்கல்யம் மாற்றிச் சென்றால், கணவருக்கு ஆயுள் கூடும் என்பது ஐதிகம்.

விழாக்கள், விசேஷங்கள்
இத்திருத்தலத்துக்கு வந்து வேண்டுதல் நிறைவேறிய தென்மாவட்ட பக்தர்கள் சித்திரைத் திருவிழாவில் முடிகாணிக்கை கொடுத்தும், தீ மிதித்தும், பறவைக் காவடி எடுத்தும், ஆயிரம்கண் பானை சமர்ப்பித்தும் அம்மனின் அருள் பெறுகின்றனர்.
சித்திரைத் திருவிழாவின்போது, கொடிக்கம்பத்துக்கு நீர் ஊற்றவும், அக்னிச்சட்டி எடுக்கவும் மண்சட்டியைப் பயன்படுத்துவதுதான் வழக்கம். அந்த மண்சட்டி செய்யும் குயவர்களின் கனவில் தோன்றும் அம்பாள், ஒவ்வொரு ஆண்டும் இத்தனை மண்சட்டிதான் செய்யவேண்டும் என்று ஆணை பிறப்பிப்பாள்.
அவள் சொன்னபடியே, சட்டி செய்யும் குயவர்களுக்குச் சரியாக, கடைசிநாள் திருவிழாவின்போது, அனைத்து மண்சட்டிகளும் விற்றுப் போகும் அதிசயமும் இங்கே நிகழ்கிறது.
அக்னிச்சட்டி எடுப்பவர்களுக்கு எந்த மரத்தில் விறகு எடுக்க வேண்டும் என்பதையும், காவடி எடுப்பவர்களுக்கு எந்த நதியில் தீர்த்தம் எடுக்கவேண்டும் என்பதையும் கனவில் தோன்றி ஆணை பிறப்பித்து உதவுகிறாள் இந்தக் கெளமாரி அம்மன்.
இந்தக் கோயிலில் விநாயகர், முருகன் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வீரபாண்டிய மன்னனுக்கு கண்பார்வை அருளிய இந்த வீரபாண்டி அம்மனை வணங்கி வழிபட்டால், வழக்குகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிகளே கிட்டும்.