
கோவை: கரூர் விவகாரம் தொடர்பாக, தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம். அது தொடர்பாக விசாரணை அறிக்கை வந்த பிறகு பேசுவோம் என திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கோவையில் இன்று (அக்.5) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட துரை.செந்தமிழ்செல்வன், பொறுப்பேற்கும் நிகழ்வையொட்டி, காந்திபுரத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று (அக்.5) நடந்தது. இதில், முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "செந்தமிழ்செல்வன் முறைப்படி, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பளாராக பொறுப்பை ஏற்கிறார். 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும். அதற்கான தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.