• October 5, 2025
  • NewsEditor
  • 0

பிரேசிலில் தனது தாயின் கருத்தடை சாதனத்தை (காப்பர்-டி) கையில் ஏந்தியபடி ஒரு குழந்தை பிறந்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தையும் சமூக ஊடகங்களில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
குயிடி என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாக காப்பர்-டி சாதனத்தைப் (IUD) பயன்படுத்தி வந்துள்ளார். 99%க்கும் மேல் கருத்தரிப்பதைத் தடுக்கும் திறன் கொண்டது என நம்பப்படும் இந்த சாதனம் இருந்தபோதிலும், அவர் கருவுற்றார். வழக்கமான பரிசோதனையின்போதே தனது கர்ப்பம் குறித்து அவர் அறிந்துகொண்டார்.

கர்ப்ப காலத்தில் கருப்பையில் இருந்த காப்பர்-டியை அகற்றினால், கருச்சிதைவு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததால், சாதனம் அகற்றப்படவில்லை. இதனால், கர்ப்ப காலம் முழுவதும் அவருக்கு இரத்தப்போக்கு போன்ற சில சிக்கல்கள் இருந்தன.

அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஒரு ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார்.

பிரேசில் சம்பவம் பலரையும் காப்பர்-டி குறித்து சிந்திக்க வைத்துள்ளது. இது மிகவும் நம்பகமான கருத்தடை முறைகளில் ஒன்றாக இருந்தாலும், அது குறித்த முழுமையான புரிதல் அவசியம்.

பிரசவத்திற்குப் பிறகு எப்போது காப்பர்-டி போடலாம்? பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது ஏற்றதா? பக்கவிளைவுகள் என்னென்ன? காப்பர் டி குறித்து தவறான நம்பிக்கைகள் என்னென்ன என்பது குறித்து மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் சாரதா சக்திராஜன் விகடனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

”99 சதவீதம் கருத்தடை சாதனம், கர்ப்பத்தை தடுக்க உதவும் என்றாலும் மீதி ஒரு சதவீதம் இது போன்ற அரிதான நிகழ்வுகள் நடைபெறும். காப்பர் டி சில சமயங்களில், தானாக விழுந்து விடும். அவர்கள் கருத்தடை சாதனம் இருப்பதாக எண்ணிக் கொள்வார்கள்.

இதனாலே சிலருக்கு கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்கும். சிலருக்கு பொருத்தப்பட்ட காப்பர் டி, அதன் இடத்திலிருந்து நகர்ந்து இருக்க வாய்ப்பிருக்கும், அதனால் கர்ப்பம் தரிக்க நேரிடலாம். ஆனால் பிரேசிலில் நடந்தது மிகவும் அரிதான ஒன்று” என்று கூறுகிறார் மருத்துவர் சாரதா சக்தி ராஜன்.

அதன் பின்னர், காப்பர் டி குறித்து பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கும் கேள்விகள் குறித்து விளக்கியிருக்கிறார் மருத்துவர் சாரதா சக்தி ராஜன்.

டாக்டர் சாரதா சக்திராஜன்
மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர்

பிரசவத்திற்குப் பிறகு எப்போது காப்பர்-டி போடலாம்?

“பிரசவத்திற்குப் பிறகு நஞ்சுக்கொடி வெளியேறிய பின் காப்பர் டி போடலாம். சிசேரியனாக இருந்தால், அறுவை சிகிச்சையின்போதே பொருத்திக்கொள்ளலாம்.

பிரசவம் முடிந்து 48 மணி நேரம் முதல் 4 வாரங்களுக்குள் பொருத்திக்கொள்ளலாம்.அல்லது பிரசவத்திற்குப் பிறகு 4 முதல் 6 வாரங்கள் கழித்து, கருப்பை மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு பொருத்திக்கொள்ளலாம்.

பிரசவம் அல்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் முடிந்து 5 நாட்களில் இந்த காப்பர் டி பொருத்திக்கொள்ளலாம்.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது ஏற்றதா?

காப்பர்-டி ஹார்மோன்கள் இல்லாத ஒரு கருத்தடை சாதனம். எனவே, இது தாய்ப்பாலின் சுரப்பையோ, அதன் தரத்தையோ எந்த விதத்திலும் பாதிக்காது. பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகவும் பாதுகாப்பான மற்றும் சிறந்த தேர்வாக இருக்கும்.

இது எவ்வளவு காலம் செயல்படும்?

காப்பர்-டியின் வகை மற்றும் பிராண்டைப் பொறுத்து, அதன் ஆயுட்காலம் மாறுபடும். பொதுவாக, இது 5 முதல் 10 ஆண்டுகள் வரை கர்ப்பத்தைத் தடுக்கும் திறன் கொண்டது.

பக்கவிளைவுகள் என்னென்ன?

அதிக மாதவிடாய் தான் பொதுவான பக்கவிளைவு. காப்பர்-டி பொருத்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிடாயின்போது அதிக இரத்தப்போக்கு, நீண்ட நாட்கள் நீடிக்கும் இரத்தப்போக்கு மற்றும் அதிக வலி ஏற்படலாம்.

மாதவிடாய் நாட்களுக்கு இடையில் லேசான இரத்தக் கசிவு இருக்கலாம்.சில சமயங்களில் கருப்பை சுருங்கி விரிவதால், சாதனம் தானாகவே கருப்பையை விட்டு வெளியேறிவிட வாய்ப்புள்ளது.

அதேபோன்று, காப்பர் டி இருப்பது எப்படி தெரிந்து கொள்வது என்பதையும் மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு அதனை அவ்வப்போது பரிசோதிப்பது நல்லது.

யாருக்கு காப்பர்-டி போடக்கூடாது?

கர்ப்பமாக இருக்கும் அல்லது கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளவர்களுக்கு காப்பர்-டி போடக்கூடாது. கருப்பை புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் உடலுறவால் ஏற்படும் ஒவ்வாவை இருப்பவர்களுக்கும் இது பொருத்தப்படக்கூடாது.

தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்

காப்பர்-டி, கருவை கலைக்கிறது என்பது உண்மையல்ல. இது கருப்பையைச் சேதப்படுத்தும் என்பதும் உண்மையல்ல. இதை அகற்றிய உடனேயே, ஒரு பெண்ணின் கருவுறும் திறன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இது எதிர்கால குழந்தைப்பேற்றை எந்த வகையிலும் பாதிக்காது. சரியான மருத்துவ ஆலோசனையுடன் காப்பர்-டியைப் பயன்படுத்தும்போது, அது நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கருத்தடை முறையாக விளங்குகிறது” என்கிறார் மருத்துவர் சாரதா சக்தி ராஜன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *