
2024-ல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோலி, அக்சர் படேலின் பேட்டிங், பும்ரா, ஹர்திக்கின் பவுலிங் என இந்தியாவின் வெற்றிக்கு அத்தனை காரணிகள் இருந்தாலும், 2007-ல் ஸ்ரீசாந்த் செய்ததைப் போல கடைசி நொடியில் டேவிட் மில்லரின் கேட்ச்சைப் பிடித்து 17 வருட கோப்பைக் கனவை நனவாக்கியவர் சூர்யகுமார் யாதவ்.
இன்று அதே டி20 அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் சூர்யகுமார் யாதவ், சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாகப் பொறுப்பேற்றதிலிருந்து ஆசிய கோப்பை உட்பட இந்தியா ஆடிய 7 டி20 தொடர்களில் 6-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் ரிசல்ட் வந்திருக்கிறது.
இப்படி வெற்றிகரமான கேப்டனாக வலம்வரும் சூர்யகுமார் யாதவ், தோனியின் தலைமையில் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவேயில்லை எனத் தற்போது வருந்தியிருக்கிறார்.
JITO Connect 2025 நிகழ்ச்சியில் பேசிய சூர்யகுமார் யாதவ், “தோனி இந்திய அணியின் கேப்டனாக இருக்கும்போது எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எப்போதும் நான் விரும்பினேன்.
ஆனால் ஒருபோதும் அது எனக்கு கிடைக்கவே இல்லை. அவருக்கு எதிராக நான் விளையாடும்போதெல்லாம் ஸ்டம்புக்கு பின்னால்தான் அவரைப் பார்த்திருக்கிறேன்.

அவ்வாறு அவருக்கெதிராக விளையாடும்போது அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், அனைத்து அழுத்தமான சூழ்நிலையிலும் நிதானமாக இருப்பது.
போட்டியில் என்ன நடக்கிறது என்பதைச் சுற்றிப் பார்த்து அதன்பின்னர் அவர் முடிவெடுக்கிறார்” என்று கூறினார்.
சூர்யகுமார் யாதவ் 2021-ல் இங்கிலாந்துக்கெதிரான டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.