• October 5, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வருகின்ற 19ம் தேதி தொடங்கவுள்ள சுற்றுப்பயணத்துக்கான அணி நேற்று (அக்டோபர் 4) அறிவிக்கப்பட்டது.

தற்போது நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்படும் சுப்மன் கில், ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பை தொடரிலிருந்து டி20 அணியின் துணைக் கேப்டனாகவும் தொடர்கிறார்.

சுப்மன் கில், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய நான்கு வீரர்கள் மூன்று வகையான போட்டிகளிலும் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு அணிகளுக்கு கேப்டன் என்ற பொறுப்புடன் அனைத்துப்போட்டிகளிலும் நிச்சயம் விளையாடுவார் என உறுதியளிக்கப்படும் வீரர் சுப்மன் கில் மட்டுமே!

சுப்மன் கில்

இந்த நிலையில் கடந்த ஓராண்டாகவே சுப்மன் கில்லுக்கு பி.சி.சி.ஐ கொடுத்துவரும் முக்கியத்துவம் குறித்து சில கேள்விகள் எழுந்துள்ளன.

அதற்கு முக்கிய காரணம் ஐ.பி.எல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்துள்ள பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்புக்காக வரிசைகட்டியிருப்பதே!

கில்லுக்கு மட்டும் ஏன்?

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு கருண் நாயரை அணியிலிருந்து நீக்கிய பி.சி.சி.ஐ நிர்வாகம், நடப்பு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கலை அணியில் சேர்த்திருக்கிறது.

இதற்கு, “ஒவ்வொரு வீரருக்கும் குறைந்தபட்சம் 15-20 வாய்ப்புகளாவது கொடுக்க விரும்புகிறோம். ஆனால், எப்போதும் அது சாத்தியமில்லை.” என்றார் அஜித் அகர்கர்.

அதாவது ஒரு பேட்ஸ்மேனை சர்வதேச கிரிக்கெட்டில் சோதிக்கும் அளவு வாய்ப்பு வழங்க முடியாத பி.சி.சி.ஐ, சுப்மன் கில்லுக்கு ஓய்வு வழங்காமல் தொடர்ந்து போட்டிகளில் ஈடுபடுத்துவது ஏன் என்பது முதல் கேள்வி!

சுப்மன் கில்
சுப்மன் கில்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ‘வொர்க்லோட்’ விவகாரம் பேச்சுபொருளானபோது, கில்லுக்கும் இந்த நிலை வரலாம் என்ற கவலை எழுந்தது.

அதற்கு “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே வொர்க்லோட் பிரச்னை உள்ளது. பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை அவர்கள் மனரீதியாக அதிகப்படியாக விளையாடுவதாக உணராதவரை அது பிரச்னை இல்லை” என பதிலளித்தார் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்ஷு கோடக்.

அவரது விளக்கம் ஏற்கக்கூடியதாக இருந்தாலும், வாய்ப்பளிக்கப்படாத வீரர்கள் பலர் வரிசையில் இருக்கையில் இது சரியான போக்கு அல்ல என்கின்றனர் ரசிகர்கள்.

ஆல் ஃபார்மட் கேப்டன்

சில மாதங்களுக்கு முன்னர் அஜித் அகர்கர் “மூன்று விதமான போட்டிகளுக்கும் மூன்று கேப்டன்கள் என்பது சாத்தியமில்லை” எனக் கூறியிருந்தார்.

ஏற்கெனவே இரண்டு விதமான போட்டிகளுக்கு கில் கேப்டனாக்கப்பட்டுவிட்டார். 35 வயதாகும் சூர்யகுமார் யாதவுக்குப் பிறகு டி20-க்கும் கேப்டனாக அவரையே நியமிக்கும் திட்டம் பி.சி.சி.ஐ-யிடம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

கில்லை ரோஹித் சர்மா, தோனி போன்ற ஆல்-ஃபார்மட் கேப்டனாக உருவாக்க பி.சி.சி.ஐ முயற்சிப்பது கண்கூடு.

ஆனால் ‘இன்றைய கிரிக்கெட்டில்’ முக்கியமான நாடுகள் எல்லாம் ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் ஒவ்வொரு கேப்டனை அல்லது இரண்டு ஃபார்மட்டுக்கு ஒரு கேப்டன் என்றே விளையாடும்போது பழைய உத்தியையே பி.சி.சி.ஐ தொடர நினைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கில், சூர்யகுமார்

இந்தியா அதிகப்படியான சர்வதேச போட்டிகளில் விளையாடும் நாடாக உள்ளது. இடைவெளியில்லாமல் அடுத்தடுத்து தொடர்களிலும் சுற்றுப்பயணங்களிலும் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 40-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் சீசனில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர். (இவற்றுடன் சிலர் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட நிர்பந்திக்கப்படுகின்றனர்).

இந்த அனைத்துப் போட்டிகளிலும் ஒரு வீரர் விளையாடுவது, அதுவும் கேப்டனாக செயல்படுவது அதீத அழுத்தம் தரும் ஒன்றாகும்.

மாற்றுவீரர்கள் பலர் இருக்கும்போது ஒருவரை மட்டுமே முன்னிறுத்துவது தேவையற்றதும் கூட!

உலகம் முழுவதுமே ஐ.பி.எல் போன்ற ஃப்ரான்சைஸ் டி20 லீக்குகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒரு அணியை வழிநடத்தும் நபர் நாட்டுக்காகவும் மூன்று அணிகளை வழிநடத்துவது என்பது உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் அதீத உழைப்பைக் கோருவது.

அதனாலேயே இப்போது எந்த நாட்டிலும் ஆல்-ஃபார்மட் கேப்டன் இல்லை. ஆனால் கில் அதனைச் செய்ய வேண்டும் என நினைக்கிறது பி.சி.சி.ஐ.

முன்னதே கூறியதைப் போல மூன்று ஃபார்மட்டிலும் விளையாடும் வீரர்கள் 4 பேர் மட்டுமே. இதனால் கில் ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் வரும்போது முற்றிலும் புதிய அணியை புரிந்துகொண்டு வழிநடத்த வேண்டும். இது மற்றுமொரு சவாலாகும்.

கில் - கம்பீர்
கில் – கம்பீர்

பி.சி.சி.ஐ சுப்மன் கில்லுக்கு அளிக்கும் அங்கீகாரம் சுமையாக உணரப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. விராட் கோலி, பாபர் அசாம் போன்ற 3 விதமான அணிகளையும் வழிநடத்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் கேப்டன்ஷிப்பின் அழுத்தம் தங்கள் பேட்டிங்கை பாதித்ததாகக் கூறியிருக்கின்றனர். ரோஹித் சர்மா மீதும் அத்தகைய விமர்சனங்கள் வந்தன.

“எனவே அனைத்து ஃபார்மட்டுக்கும் ஒரே கேப்டன் என்ற பி.சி.சி.ஐ-யின் வரையரைக்குள் கில்லைத் திணிக்கும் முடிவை நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனக் கோரும் குரல்களுக்கு செவிசாய்க்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதில் கில்லின் நிலைப்பாடு என்ன?

அதேசமயம் பிசிசிஐ-யின் இத்தகைய முடிவுக்கு அவர்களை மட்டுமே கேள்விக்குட்படுத்த முடியாது. காலம் காலமாக இந்திய அணியில் எத்தனை பேர் சிறப்பாக விளையாடினாலும் தனிமனித துதிபாடல் என்பது வழக்கமாக ஒன்றாக இருக்கிறது.

சச்சின், தோனி, கோலி, ரோஹித் என ரசிகர்கள் இன்றும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை இப்போதும் பார்க்கிறோம்.

ஆனால், குழு விளையாட்டில் தனிமனித துதிபாடல் முற்றிலுமாக புறக்கணிப்படவேண்டியதுதான். ரோஹித்துக்குத் பிறகு அப்படி யாரையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ரசிகர்கள் நகரவில்லை.

சுப்மன் கில் - கம்பீர்
சுப்மன் கில் – கம்பீர்

இவ்வாறு ஒரு நல்ல டிராக்கை நோக்கி இந்திய கிரிக்கெட் நகரும்போது, பி.சி.சி.ஐ தாமாக முன்வந்து அனைத்திலும் கில்லை முன்னிலைப்படுத்தி தனிமனித துதிபாடலுக்கு அடித்தளமிடுவதாக இருக்கிறது அவர்களின் நடவடிக்கை.

ஏனெனில், மூன்று ஃபார்மெட்டுக்கு மூன்று கேப்டன்கள் இருந்தால், பயிற்சியாளர்கள் மூன்று வெவ்வேறு கேப்டன்களிடம் கேம் பிளான் போடுவது கடினம் என்று கூறும் அஜித் அகர்காருக்கு, மூன்று ஃபார்மெட்டிலும் ஆடுபவர்கள் நான்கைந்து பேர் மட்டுமே இருக்கும்போது மற்ற வீரர்களிடம் அந்த கேம் பிளானை செயல்படுத்துவது ஆல் ஃபார்மெட் ஒன் கேப்டனுக்கு சிரமமாக இருக்கும் என்று தெரியாதா?

சுப்மன் கில்
சுப்மன் கில்

இந்த இடத்தில்தான், வொர்க் லோட் வந்தாலும் பரவாயில்லை சச்சின், தோனி, கோலி, ரோஹித் வரிசையில் இந்தத் தலைமுறையில் இந்திய அணியின் முகமாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கில்லுக்கு வந்துவிட்டதோ என்ற கோணத்திலும் கேள்வி எழுகிறது.

சஞ்சு, கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் என ஏற்கெனவே கேப்டன்சியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருக்கும்போது கேப்டன் பதவிக்கு கில்லை விட்டால் வேறு ஆள் இல்லை என்று பி.சி.சி.ஐ முடிவெடுப்பதும், அதை அப்படியே அவர்கள் கொடுக்கிறார்கள் நான் ஏற்றுக்கொண்டேன் என கில் ஏற்றுக்கொள்வதும், செயற்கையாக இந்திய கிரிக்கெட்டின் இளவரசனை உருவாக்குகிறார்களா என பலரை முணுமுணுக்க வைக்கிறது.

எதுவாக இருந்தாலும் வீரர்களின் வேலை விளையாடுவது மட்டும்தான், அவர்களுக்கு இளவரசன், அரசன் போன்ற தற்காலிக மகுடங்களை ரசிகர்கள் மட்டும் கொடுப்பார்கள் என்பதை கடந்தகால வரலாறுகள் உணர்த்தும்!

கில் கேப்டனானது குறித்தும், இந்திய அணியின் கேப்டன்சி விவகாரத்தில் பி.சி.சி.ஐ-யின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்துக்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *