• October 5, 2025
  • NewsEditor
  • 0

பிரபல மளிகைப் பொருள் டெலிவரி நிறுவனமான பிளிங்கிட்டின் (Blinkit) டெலிவரி ஊழியர் ஒருவர், டெலிவரியின் போது தன்னைத் தகாத முறையில் தொட்டதாக ஒரு பெண் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை அப்பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோவில், பொருளை டெலிவரி செய்த டெலிவரி ஊழியர், பெண்ணை தவறாகத் தொடுகிறார். இதுகுறித்து அப்பெண், தன்னைத் தகாத முறையில் தொட்டதாகவும், தொடுவதைத் தடுப்பதற்காக டெலிவரிப் பொட்டலத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது. பலரும் தங்கள் அதிர்ச்சியையும் அப்பெண்ணுக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். பிளிங்கிட்டின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவைப் பிரிவு, இந்த வழக்கமான மன்னிப்பு கேட்டிருக்கிறது. ஆனால், இதுஒரு கண்துடைப்பு என்று முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் புகார்களையும், அது தொடர்பான ஆதார வீடியோவையும் நேரடியாக பிளிங்கிட் நிறுவனத்திற்கு அனுப்பியிருக்கிறார்.

இதன் உண்மைத்தன்மையையும், வீடியோ ஆதாரத்தையும் உறுதி செய்த பிளிங்கிட் நிறுவனம், சம்பந்தப்பட்ட டெலிவரி ஊழியருடனான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்துள்ளது. வாடிக்கையாளர் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என்றும் தெரிவித்திருக்கிறது. இந்த விஷயம் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலைக் கொடுக்கும் என்று தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார். இருப்பினும் சமூகவலைதள பதிவுகளை கவனித்து மும்பை காவல்துறையும் இதுதொடர்பான ஆதாரங்களையும், புகார்களையும் அனுப்ப அப்பெண்ணிடம் கேட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிருக்கிறது. இதுபோன்ற டெலிவரி விஷியங்களில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வீட்டில் தனியாக இருந்து கொண்டு ஆன்லைனின் ஆர்டர் செய்யும் பெண்களின் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *