• October 5, 2025
  • NewsEditor
  • 0

மாமியார், மருமகள் பிரச்னைக்கு என்ன தீர்வு என்று ஏ ஐ-யிடம் கேட்டால்கூட, பரஸ்பரம் மரியாதை கொடுங்கள், மனம் விட்டுப் பேசுங்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளுங்கள் என்று நடுநிலையுடன் தீர்வு சொல்கிறது.

ஆனால், நாம் இன்னமும் மருமகளையே அட்ஜஸ்ட் செய்துகொள்ள அறிவுறுத்துகிறோம். நெகட்டிவ் விதிவிலக்குகளை ஒதுக்கிவிட்டு, மருமகளுக்கு மட்டும் இப்படி அறிவுறுத்துவது சரிதானா; இதற்கு சரியான தீர்வு என்னவாக இருக்க முடியும்? வாருங்கள் அலசுவோம்.

Relationship

அப்பாவுக்கும், கணவருக்கும் அடுத்து மகனை முழுமையாகச் சார்ந்திருக்கும் அம்மாக்களுக்கு, மகனின் திருமணத்துக்குப் பிறகு, தன்னுடைய எதிர்காலம் குறித்த பயம் எழுவது இயல்பு மற்றும் நியாயம்தான்.

அதனால், அந்தப் பயத்தைத் தன் அம்மாவுக்கு வராமல் தடுக்க வேண்டியதும், தன் அம்மாவுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பைத் தன்னுடைய திருமணத்துக்கு முன்னரே ஏற்படுத்த வேண்டியதும் மகனுடைய கடமைதான். இது முதல் நிலை தீர்வு.

திருமணம் என்ற அமைப்பு ஆரம்பித்ததிலிருந்தே இந்த ஒரு பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும் இந்தப் பிரச்னை இருந்துகொண்டிருக்கிறது என்பதே சற்று சோர்வை ஏற்படுத்துகிறது.

அதனால், நம் வீட்டில் இந்தப் பிரச்னை வராமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பதை திருமணத்துக்கு முன்னரே, சம்பந்தப்பட்ட மூன்று நபர்கள் (வருங்கால மாமியார், மருமகள் மற்றும் பிரச்னையின் சைலன்ட் பார்ட்னரான அந்த மகன்) கலந்து ஆலோசிக்கலாம். இது இரண்டாம் நிலை தீர்வு.

உறவுகள்
உறவுகள்

கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும், காலங்காலமாக இந்தப் பிரச்னை சரிசெய்யப்படாமலே இருக்கிறது என்றால், இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை (திருத்திக்கொள்ளவில்லை என்றும் சொல்லலாம்) என்றுதான் அர்த்தம். மகனுடன் வாழ வருகிற பெண் கதவை சாத்துவது இயல்பான ஒன்றுதான்; அதற்காகத்தான் மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம் என்கிற தெளிவு மாமியாருக்கும், ‘அம்மா முந்தானையிலிருந்து சடார்னு பொண்டாட்டி ஷாலுக்கு மாறிடக்கூடாது. அப்படியே மாற விரும்பினாலும் அதை மெள்ள மெள்ளதான் செய்யணும்; இல்லைன்னா அம்மா மனசு புண்படும்’ என்கிற தெளிவு மகனுக்கும், ‘அவங்க என் கணவரோட அம்மா. அதனால எனக்கும் அம்மா மாதிரிதான்… முடிஞ்ச அளவுக்கு அவங்களை என் அம்மா மாதிரியே எம்பதியோட நடத்தணும்’ என்கிற தெளிவு மருமகளுக்கும் இருக்க வேண்டும். இது மூன்றாம் நிலை தீர்வு.

‘மருமகள்னா மகனை தன்கிட்ட இருந்து பிரிக்க வந்தவ’, ‘மாமியார்னாலே கெட்டவங்க’ – அடிமனதில் இருக்கிற இந்த எண்ணத்தைத் திருமணத்துக்கு முன்னரே தலையைச் சுற்றி எறிந்துவிட்டு திருமணம் செய்துகொண்டால், குடும்பமே நிம்மதியாக இருக்கும். இதில் அம்மாவின் நல்ல இயல்பை மனைவிக்கும், மனைவியின் நல்ல இயல்பை அம்மாவுக்கும் சொல்கிற விதத்தில் சொல்ல வேண்டியது மகனுடைய பொறுப்பு. இது நான்காம் நிலை தீர்வு.

வீட்டுக்குப் புதிதாக (வாழ) வந்தப் பெண்ணுக்கு, வீடு, சூழல், கணவன், மாமியார், வீட்டு வேலைகள் எல்லாமே புதிதாக இருக்கின்ற நிலையில், ’நீ தான் எங்க வீட்ல இருக்கிற எல்லாரையும், குறிப்பா எங்கம்மாவை அட்ஜஸ்ட் பண்ணணும்’ என்பதில் நியாயமிருப்பதாகத் தெரியவில்லை.

தவிர, எங்கள் வீட்டுக்குப் புதிதாக வந்த நீ தான் எங்கள் எல்லோரையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பதில், அப்படி செய்யாவிட்டால், ‘நீ இந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாது’ என்கிற அர்த்தமும் மறைந்திருக்கிறது. இதிலும் நியாயமிருப்பதாகத் தெரியவில்லை.

அதனால், ‘நீ தான் அட்ஜஸ்ட் செய்யணும்’ என்று ஒருவரை மட்டும் கார்னர் செய்வதைவிட, ஒரு திருமண வாழ்க்கையைக் கெடுப்பதற்கு வேறு வாக்கியமே தேவையில்லை. இதைத் தவிர்ப்பதுதான் ஐந்தாம் நிலை தீர்வு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *