
மும்பைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தி வரப்படுகிறது. சில பொருட்கள் தபால் மூலம் கடத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த பார்சல்களை மும்பை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அது போன்று வந்த பார்சல்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது அதில் ஒரு பார்சலில் மூலிகை தேயிலை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் சந்தேகம் அடைந்த சுங்க வரித்துறை அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்துப் பார்த்தனர். அதில் பச்சை இலை இருந்தது. அதனை சோதித்து பார்த்தபோது அது கஞ்சா என்று தெரியவந்தது.
அந்த பார்சல் அங்குஷ் பண்டாரி என்பவருக்கு வந்திருந்தது. அதுவும் தபால் பார்சல் மூலம் வந்திருந்தது. அந்த பார்சலுக்குரிய நபரை பிடிக்க முடிவு செய்த சிறப்பு புலனாய்வு மற்றும் விசாரணை அதிகாரிகள் அங்குஷ் பண்டாரி இருக்கும் பகுதியில் வேலை செய்யும் தபால்காரர் உதவியை நாடினர்.
அவர் உதவியுடன் பண்டாரியை பிடிக்க முடிவு செய்தனர். தபால்காரரிடம் பார்சாலை கொடுத்து பண்டாரிக்கு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். தபால்காரர் பண்டாரிக்கு போன் செய்து தபால் வந்திருப்பதாக தெரிவித்தார்.
உடனே பண்டாரி பார்சலை வாங்க வந்தார். அவரை சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழுவினர் பிடித்து கைது செய்தனர். பண்டாரி மும்பையில் போலீஸ்காரராக வேலை செய்வது விசாரணையில் தெரிய வந்தது. அந்த பார்சல் குறித்து கேட்டதற்கு அதனை அவரது நண்பர் நிஹால் ஆர்டர் செய்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து பண்டாரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு கோர்ட் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. அவரது நண்பர் நிஹாலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிஹால் டிராவல் ஏஜென்சி நடத்துவதாக தெரிய வந்துள்ளது.