
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரம் கிராமத்தில் உள்ள குல தெய்வமான கருப்பசாமி கோயிலில் நடிகர் தனுஷ் இன்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருடன் அவரது சகோதரரும் இயக்குநருமான செல்வராகவன், தந்தை கஸ்தூரிராஜா, தாய் விஜயலட்சுமி, மகன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்டோரும் குல தெய்வ கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று ஆண்டிபட்டி அருகே முத்துரங்காபுரத்தில் உள்ள கஸ்தூரி அம்மன் கோவிலில் சாமி வழிபாடு செய்த தனுஷ், அங்குள்ள ரசிகர்கள் மற்றும் கிராம பொதுமக்களை சந்திக்காமல் சென்றதற்கு கிராம மக்கள் வருத்தம் தெரிவித்த நிலையில், இன்று சங்கராபுரத்தில் பொதுமக்களுடன் பேசியதோடு அரை மணி நேரம் வரை மக்களோடு இருந்தார்.

நடிகர் தனுஷுடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் கோயில் அருகே அமைக்கப்பட்ட பந்தலில் தனது குடும்பத்தார் மற்றும் சங்கராபுரம் கிராம மக்களுடன் உணவருந்தினார்.
தனியார் மண்டபத்தில் கிராம மக்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படம் வெளியாவதற்கு முன்பு, தற்போது படம் வெளியான பின்னரும், ஆண்டிப்பட்டி மற்றும் போடி சங்கராபுரத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் தனுஷ்.
தான் பார்த்து வளர்ந்த தன்னுடைய ஊர் கதையை படமாக எடுத்திருப்பதால், போடி சங்கராபுரம் கோயிலில் கிடா வெட்டி கிராம மக்களுடன் தனுஷ் குடும்பத்தாருடன் உணவருந்தி சென்றுள்ளார்.

இட்லி கடை படத்திலும் சங்கராபுரத்தில் உள்ள இட்லி கடை என்று காட்சிப்படுத்தியிருப்பார்.
மேலும் தன்னுடைய அப்பாவின் ஊரான சங்கராபுரத்தில் நடந்த நிகழ்வுகளுடன் புனைவுகளைக் கலந்து படம் எடுத்ததால், இந்த ஊர் மக்களுக்குக் கிடாவிருந்து வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.