• October 5, 2025
  • NewsEditor
  • 0

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள், சில நாட்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது, இந்திய அளவில் பெற்றோர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழப்பு நடந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் இருமல் மருந்தின் 19 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், 9 மாதிரிகளில், சிறுநீரக பாதிப்புக்குக் காரணமான டை எத்திலின் க்ளைகால் (diethylene glycol) மற்றும் எத்திலின் க்ளைகால் (ethylene glycol) போன்ற நச்சுப்பொருட்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளது. 10 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வராத நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ’Coldrif’ என்ற இருமல் மருந்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இருமல் மருந்து

இந்த இருமல் மருந்து விஷயத்தில் நாம் அச்சம் கொள்ள வேண்டுமா என, சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம்.

‘’அந்த குழந்தைகள் இறந்ததற்கு, சிரப்களில் அசுத்தமாக சேர்ந்த நச்சுப்பொருளான டை எத்திலின் க்ளைகால் மற்றும் எத்திலின் க்ளைகால் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை மற்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவை நடத்திய சோதனையில், அந்த டானிக்குகளில் டை எத்திலின் க்ளைகால் மற்றும் எத்திலின் க்ளைகால் இல்லை என்று கூறிவிட்டது.

இருமல் மருந்து
இருமல் மருந்து

தவிர, ராஜஸ்தானில் இறந்த இரண்டு குழந்தைகளின் இறப்புக்கு இருமல் டானிக்கில் டெக்ஸ்ட்ரோமெதோர்ஃபன் (dextromethorphan) எனும் மருந்து இருந்ததே காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டெக்ஸ்ட்ரோமெதோர்ஃபன் மருந்து வழங்குவதற்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஃபினைல் எஃப்ரின்( phenyl ephrine) மற்றும் க்ளோர் ஃபெனிரமின் மேலியேட் (Chlorpheniramine maleate) என்கிற இவ்விரண்டு மருந்துகளின் கூட்டான இருமல் டானிக்கை நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்கிற உத்தரவு 2023 டிசம்பர் மாதமே பிறக்கப்பிட்டுள்ளது. மத்திய சுகாதார சேவை இயக்குநர் டாக்டர். சுனிதா சர்மாவும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் டானிக் வழங்கக்கூடாது என்றும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற இருமலை குணமாக்க மருந்தில்லா மருத்துவ முறைகளை பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இருமல் மருந்து
இருமல் மருந்து

ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை இருமல் டானிக்குகளை மருத்துவருடைய பரிந்துரை இல்லாமலேயே மருந்தகங்களில் வாங்க முடியும். இது சட்டப்படி தவறென்றாலும், தங்கு தடையின்றி நடந்துகொண்டே தான் இருக்கிறது. சுய மருத்துவம் செய்துகொள்வது என்றாவது ஒருநாள் ஆபத்தில் முடியலாம்’’ என்று எச்சரிக்கிற மருத்துவர், இருமலுக்கானத் தீர்வுகளையும் சொல்கிறார்.

’’வறட்டு இருமல், வைரஸ் தொற்று, நெஞ்செரிச்சல், ஒவ்வாமை, சுவாசப்பாதை தொற்று, ஆஸ்துமா என பல காரணங்களால் இருமல் ஏற்படும். அதனால் இருமல் என்பது நோய் கிடையாது. அது ஓர் அறிகுறி தான்.

 டாக்டர்  ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

வறட்டு இருமல் என்றால் காலையும், இரவும் ஒரு டீஸ்பூன் தேன் வருகி வந்தால், தேன் சுவாசப்பாதையை இதமாக்கி இருமலைக் கட்டுப்படுத்தக் கூடும்

நெஞ்செரிச்சலால் இருமல் வந்தால், மசாலா மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, நெஞ்செரிச்சலுக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இருமல் கட்டுப்படும்.

சுவாசப்பாதையில் பிரச்னை காரணமாக இருமல் வந்தால், அடிக்கடி வெதுவெதுப்பான நீர், சூப், இஞ்சி டீ போன்றவற்றை அருந்துவது சுவாசப்பாதையை லேசாக விரிவடையச் செய்யும். எனவே இருமல் குறையலாம். உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்புளிக்கும் போதும் இருமல் குறையலாம்.

சிலருக்கு ஏசி அறைகளில் இருக்கும்போது தொண்டை உள்ளிட்ட சுவாசப்பாதை வறண்டு போய் புகைச்சல் இருமல் வரும். நீராவி பிடித்தல் அல்லது ஈரப்பதத்தை அதிகரிக்கும் ஹ்யூமிடிஃபையர் உபயோகிக்கும்போது இந்த வகை இருமல் குறையலாம். தவிர, ஏசி அறைகளில் இருப்பவர்களுக்கு அந்த நுண் தூசி காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு இருமல் ஏற்படலாம். ஏசியை முறையாக அடிக்கடி சுத்தம் செய்வது இதை வராமலே தடுக்கும்.

ஆஸ்துமா போன்ற நிலையில் சுவாசப்பாதை சுருக்கத்தால் இருமல் வந்தால், அதற்கான சிகிச்சையை மருத்துவரிடம் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *