• October 5, 2025
  • NewsEditor
  • 0

நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் லட்சாதிபதியாகி இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பங்கெடுத்து கோடீஸ்வரராகி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிதாக மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ரூ.50 லட்சம் வெற்றி பெற்று இருக்கிறார். சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள பைதன் என்ற இடத்தை சேர்ந்த கைலாஷ் குந்தேவார் என்ற விவசாயி தனது 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். வறட்சி, வெள்ளம், போதிய அளவு மகசூல் இல்லாமை போன்ற காரணங்களால் மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்ட கைலாஷ் வருமானத்திற்கு அடுத்தவர் நிலத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

ஆனாலும் தனது வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். இது குறித்து கைலாஷ் கூறுகையில்,”நான் 2015ம் ஆண்டு முதல் முறையாக ஸ்மார்ட் போன் வாங்கினேன். அதில்தான் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை பார்த்தேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காகவே அதனை பார்த்தேன். கேள்விகளுக்கு விடையளிப்பதால் சம்பாதிக்க முடியும் என்று நினைக்கவில்லை. 2018ம் ஆண்டு ஹின்கோலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்து பணம் சம்பாதிப்பதை பார்த்தேன். உடனே அவர் பற்றிய விபரத்தை பேஸ்புக்கில் தேடினேன்.

அவரது நம்பரை தேடி எடுத்து பேசினேன். அவர்தான் கேள்விகளுக்கு பதிலளித்தால் கட்டாயம் பணம் கிடைக்கும் என்று தெரிவித்தார். அதனை கேட்ட பிறகு நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தேன்.

இதற்காக நான் என்னை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். தினமும் விவசாயம் அல்லது கூலிவேலைக்கு சென்று வந்த பிறகு யூடியூப் மூலம் பொது தகவல்களை படிக்க ஆரம்பித்தேன். தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பேன். அதனை எனக்கு பழக்கமாக மாற்றிக்கொண்டேன். 7 ஆண்டுகள் முயற்சி செய்து இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்”என்றார். கைலாஷ் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 14 கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தார். 15வது கேள்விக்கு பதிலளித்தால் ஒரு கோடி பரிசு கிடைக்கும்.

அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி கைலாஷ் தனது நண்பருக்கு வீடியோ கால் செய்து பேசினார். ஆனால் அந்த நண்பருக்கும் சரியாக பதில் தெரியவில்லை. இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்தி 15வது கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள கைலாஷ் முயன்றார். ஆனால் அதுவும் முடியவில்லை. இதையடுத்து 14வது கேள்வியோடு முடித்துக்கொண்டு ரூ.50 லட்சத்தோடு வெளியேறிவிட்டார். இதன் மூலம் அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு கிடைத்து இருக்கிறது.

பரிசுப்பணத்தை என்ன செய்வீர்கள் என்று கைலாஷிடம் கேட்டதற்கு,”அமைதியாக இருந்து முடிவு செய்யவேண்டும். முதலில் எனது குழந்தைகளின் படிப்பை உறுதி செய்யவேண்டும். நான் ஒரு கிரிக்கெட் ரசிகர். எனது இரண்டு மகன்களையும் கிரிக்கெட் வீரர்களாக மாற்றுவது எனது கனவாக இருக்கிறது”என்று தெரிவித்தார். கோன்பனேகா குரோர்பதியில் ரூ.50 லட்சம் சம்பாதித்து இருக்கும் கைலாஷ் தற்போது மாதம் ரூ.3 ஆயிரம் மட்டுமே சம்பாதித்து வருகிறார். அவருக்கு கிடைத்திருக்கும் ரூ.50 லட்சம் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் மாற்றிக்காட்ட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் அமிதாப்பச்சனும் ஒரு காலத்தில் மிகவும் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *