
சூரிய மண்டலத்தின் தொலைதூரப் பகுதியில் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் புதிய ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்மமான கிரகத்திற்கு ‘பிளானட் Y’ (Planet Y) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் உள்ள பகுதியில் சுமார் 50 விண்பொருட்களின் சுற்றுப்பாதையில் ஒரு விசித்திரமான சாய்வு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த விண்பொருட்கள் சுமார் 15 டிகிரி சாய்வில் காணப்படுவது, அங்கு ஒரு மறைமுக கிரகத்தின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த ஆய்வை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் அமீர் சிராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர். பூமியை விட சிறியதாகவும், புதன் கிரகத்தை விட பெரியதாகவும் இந்த கிரகம் சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தில் சுற்றிக்கொண்டிருக்கலாம் என்று கணிக்கின்றனர்.
பிளானட் நைன்’ (Planet Nine) என்ற ஒரு கிரகம் இதேபோன்ற கோட்பாட்டின் அடிப்படையில் முன்மொழியப்பட்டது.
ஆனால், பிளானட் Y என்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பிளானட் நைன் பூமியைப் போல 5 முதல் 10 மடங்கு பெரியதாகவும், மிகத் தொலைவிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் பிளானட் Y புதன் மற்றும் பூமிக்கு இடைப்பட்ட அளவில் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் சூரிய மண்டலத்தில் ஒரே நேரத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்புக்கான சாத்தியக்கூறுகள் வலுவாக இருந்தாலும் ‘பிளானட் Y’ இருப்பு இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. இதனை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.