• October 4, 2025
  • NewsEditor
  • 0

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. பாஜக எம்.பிக்களின் விசாரணைக் குழுவும் தனியாக பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்திருந்தனர்.

இதற்கிடையில் அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து வருகின்றனர்.

டிடிவி தினகரன் – தவெக விஜய்

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய அமமுக டிடிவி தினகரன், “கரூர் சம்பவத்தின் முதல்வர் ஸ்டாலின் நிதானமாகவும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டார். ஆட்சி அதிகாரம் அவர் கையில்தான் இருக்கிறது, அவரது கூட்டணி கட்சிகள் திருமா உள்ளிட்டவர்கள் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், அதையெல்லாம் செய்யாமல் நிதானமாகத்தான் இந்த விஷயத்தை கையாள்கிறார் ஸ்டாலின்.

‘இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்கக் கூடாது’ என்ற பொறுப்புணர்வுதான் முதல்வர் ஸ்டாலின் செயலில் தெரிகிறது. விஜய் மற்றும் அவரது கட்சிக்காரர்களை கைது செய்துதான் பழிதீர்க்க வேண்டும் என்ற நோக்கம் ஸ்டாலினிடம் இல்லை.

தவெக கட்சியின் ஆதவ் அர்ஜுனா, N. ஆனந்த், நிர்மல் குமார் தலைமறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இது விஜய்யின் தவெகவினரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இல்லை, உச்சநீதிமன்றம் சென்றுகூட ஜாமின் வாங்கிக் கொள்ளட்டும் என்று பெருந்தன்மையோடுதான் விட்டுவைத்திருக்கிறது இந்த அரசு. கைது செய்ய நினைத்தால் இன்னும் விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

பழி தீர்க்க நினைக்கிறார்கள் என்று விஜய் பேசுவதெல்லாம் அவரின் அனுபவமின்மையைக் காட்டுகிறது. ஆனால், எல்லாத்தையும் விட்டுவிட்டு பெருந்தன்மையோடுதான் இருக்கிறார் ஸ்டாலின். அது அவரின் அனுபவத்தைக் காட்டுகிறது.

விஜய் அவர்கள் தார்மீகப் பொறுப்பேற்றிருந்தால், நீதிமன்றம் கூட அவரை இவ்வளவுதூரம் கண்டித்திருக்காது.

நான் திமுக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆதரவாகப் பேசவில்லை. நடக்கும் உண்மையை, யதார்த்தைப் பேசுகிறேன்” என்று கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.

தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
கரூர் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி

மேலும், “எப்பவும் உணர்ச்சி பொங்க பேசும் நண்பர் சீமான்கூட இந்த கரூர் சம்பவத்தில் சரியாகப் பேசியிருந்தார். ஆனால், இந்த எடப்பாடி பழனிசாமி எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்று பதவி வெறியில் இந்த சமயத்தில்கூட திமுகவை விமர்சித்துப் பேசியிருந்தார். இதில் விஜய்க்கு ஆதரவாக பேசுவதுபோல திமுக அரசின் மீது குற்றம்சாட்டி அரசியல் செய்திருக்கிறார். ஆடு நனைவதைப் பார்த்து ஓநாய் வருத்தப்பட்டதைப் போல விஜய்க்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்” எனக் கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *