
டெல்லி விமான நிலையத்தில் துபாயைச் சேர்த்த பயணி ஒருவர் அணிந்திருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
”இது வணிக நோக்கம் கொண்டது” என சுங்க அதிகாரிகள் இதற்குக் கூறிய காரணத்தை எதிர்த்து சம்பந்தப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் எதற்கு தீர்ப்பும் வழங்கியிருக்கிறது.
என்ன நடந்தது?
துபாயில் வசிக்கும் இந்தியரான மகேஷ் மல்கானி என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த ரூ.13.48 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தப் பொருள் பற்றிய உரிய அறிவிப்பு கொடுக்கவில்லை என்பதுதான் இதற்குக் காரணமாக அவர்கள் கூறியுள்ளனர்.
பறிமுதல் செய்ததோடு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மீட்பு அபராதம் செலுத்தி அந்த கடிகாரத்தை மீண்டும் ஏற்றுமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகளால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக அந்த உத்தரவின் இந்த கைக்கடிகாரம் ”வணிக நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இருக்க வாய்ப்பில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மகேஷ் வணிக நோக்கம் என்ற வார்த்தையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒரே ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தை வணிக அளவு எனக் கருதமுடியாது. தனிப்பட்ட பயன்பாட்டிற்கு வாய்ப்பு இல்லை என கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறியிருக்கிறது.
இந்த கடிகாரத்தை மீட்பதற்கான அபராதத் தொகையை செலுத்தி கடிகாரத்தை மீட்டுக் கொள்ளலாம் என நீதிமன்றம் காலக்கெடு வழங்கியுள்ளது.