
சென்னை: மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்ய மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது. உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஒன்று முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரத்தில் செயல்படும் சென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரண்டு இருமல் மருந்துகளை அக் குழந்தைகள் உட்கொண்டது கண்டறியப்பட்டது.