• October 4, 2025
  • NewsEditor
  • 0

கன்னட சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக ரிஷப் ஷெட்டி இன்று பார்க்கப்படுகிறார்.

யக்ஷகானம் எனும் பாரம்பரியக் கலையில் வேரூன்றி, உடுப்பி மண்ணின் வாசனையைத் திரையில் கொண்டு வந்து, ரசிகர்களை வியக்க வைத்த பெருமை இவரையே சாரும்.

Rishab Shetty

நடிகர், இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் ரிஷப் ஷெட்டி.

பி.காம் படிப்பை முடித்துவிட்டு, சினிமா வாய்ப்புக்காக தண்ணீர் கேன் விற்பது போன்ற சிறு வேலைகளைச் செய்து, கண்ட கனவை உறுதியுடன் பின்தொடர்ந்தவர்.

இவரது அர்ப்பணிப்பும், உள்ளூர் கலாசாரத்தின் மீதான தீவிர பற்றும்தான் ‘காந்தாரா’ படைப்பை உருவாக்கக் காரணமாக அமைந்தன.

ரிஷப் ஷெட்டியின் இயற்பெயர் பிரசாந்த் ஷெட்டி. இவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கீரடி கிராமத்தில் 1983-ஆம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி பிறந்தார்.

சிறு வயது முதல் நாடகங்களில் ஆர்வம் கொண்டிருந்த இவர், பெங்களூரில் வணிகவியல் (B.Com) படிக்கும்போதும் கலைகளில் ஈடுபட்டார். படிப்பு முடிந்து சினிமா கனவுடன் வந்தவருக்குக் காத்திருந்தது பெரும் போராட்டம்.

இவர் சினிமா வாய்ப்புக்காக அலைந்த காலகட்டத்தில், வாழ்க்கையை நடத்தப் பல வேலைகளைச் செய்ய நேர்ந்தது.

Rishab Shetty
Rishab Shetty

ஒரு காலத்தில் தண்ணீர் கேன்களை விற்கும் வேலை, ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் பணி, கட்டுமானத் துறையில் (Civil Construction) உதவியாளர் பணி, உணவகங்களில் பணி எனப் பல்வேறு சிறு வேலைகளைச் செய்துள்ளார்.

அத்துடன், அவர் இரண்டு முறை MBA படிக்க முயன்றும் அதை முடிக்க முடியவில்லையாம்.

இந்தக் கடும் போராட்டங்களுக்கு மத்தியிலும், பெங்களூரில் உள்ள அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் திரைப்பட இயக்கத்தில் சான்றிதழ் படிப்பை முடித்து, தன் கலை ஆர்வத்தை மேலும் வளர்த்துக் கொண்டார்.

சினிமா துறைக்குள் நுழைவதற்காக, ரிஷப் ஷெட்டி தன் முயற்சியை விடாமல் தொடர்ந்தார்.

2008-ஆம் ஆண்டு மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக (Office Boy) பணியில் சேர்ந்தார்.

அங்கு ஒரு தயாரிப்பாளருக்கு ஓட்டுநராகவும் (Driver) அவர் பணியாற்றியுள்ளார். அதேசமயம், திரைப்படப் படப்பிடிப்புகளில் கிளாப் பாய் (Clap Boy), ஸ்பாட் பாய் (Spot Boy) போன்ற சிறிய வேலைகளைச் செய்ததன் மூலமும், உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததன் மூலமும் சினிமாவைக் கற்றுக்கொண்டார்.

Rishab Shetty
Rishab Shetty

இந்த உழைப்பு, அவரை நடிகராகவும் இயக்குநராகவும் பட்டை தீட்டியது.

2012-ஆம் ஆண்டு வெளியான ‘துக்ளக்’ (Tuglak) திரைப்படத்தில் இவரது முதல் முக்கிய வேடம் அமைந்தாலும், நடிகராகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதனால் அவர் இயக்குநராகத் தன் திறமையை வெளிப்படுத்தத் தீர்மானித்தார்.

இயக்குநராக ரிஷப் ஷெட்டியின் முதல் படமான ‘ரிக்கி’ (Ricky), 2016-ஆம் ஆண்டு வெளியீட்டின்போது பல இன்னல்களைச் சந்தித்தது.

தன் சொந்த ஊரான உடுப்பியில், தன் படத்திற்கு ஒரு மாலை நேரக் காட்சியை (7 PM Show) பெறுவதற்காகப் பலரிடம் போராடியதை அவர் பதிவு செய்திருந்தார்.

ஆனால் அதே ஆண்டில் அவர் இயக்கிய ‘கிரிக் பார்ட்டி’ (Kirik Party) திரைப்படம், கன்னடத் திரையுலகில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்று, அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

Rishab Shetty
Rishab Shetty

இந்தப் படத்துக்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதையும் (சிறந்த இயக்குநர்) பெற்றார்.

இதைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு அவர் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான ‘சர்காரி ஹை. பிரா. ஷாலே, காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய்’ படத்திற்காக தேசிய விருதில் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான விருதை வென்று, தான் ஒரு திறமையான கலைஞர் என்பதை தேசம் முழுவதும் நிரூபித்தார்.

ரிஷப் ஷெட்டியின் கலை வாழ்வின் உச்சமாக 2022-ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் அமைந்தது.

சிறு வயது முதல் அவர் பார்த்து வளர்ந்த பூத கோலா எனும் சடங்கு மற்றும் நிலத்தின் மீதான பழங்குடிகளின் பிணைப்பு ஆகியவையே ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டி சொன்னார்.

இந்தப் படத்தில் ‘சிவா’ என்ற கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட கடுமையான பயிற்சி, யக்ஷகானம் கலையின் மீதான பாரம்பரியத்தை உலகறியச் செய்தது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற காந்தாரா, அவரைப் பான்-இந்தியா ஸ்டாராக உயர்த்தியது.

இந்தப் படத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருதில் சிறந்த முன்னணி நடிகருக்கான விருது கிடைத்தது.

Rishab Shetty
Rishab Shetty

ஹிட் அடிக்கும் படங்களுக்கு சீக்குவல் எடுக்கும் வழக்கம் இந்திய சினிமாவில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் விஷயம். செயற்கையான தன்மையில் கதையை இழுத்து ஒரு இரண்டாம் பாகத்தை எடுத்துவிடக் கூடாது என்பதில் ரிஷப் ஷெட்டி முழு கவனமாக இருந்தார். அதற்கென மூன்றாண்டுகளுக்குத் தன்னுடைய கவனத்தை வேறெங்கும் சிதறவிடாமல் முழுவீச்சாக ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை எடுத்திருக்கிறார்.

சிவாவின் மூதாதையரின் கதையைச் சொல்லும் ப்ரீக்வல் திரைப்படமாக இது வந்திருக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ அதிரடியான திரையரங்க அனுபவத்தைத் தரும் பிரமாண்ட படைப்பாக அவர் எடுத்திருக்கிறார்.

தன்னுடைய இந்த மாபெரும் வெற்றியைக் குறித்து ரிஷப் ஷெட்டி பேசும்போது, சினிமாவுக்கான வாய்ப்புக்காக மும்பையில் ஓட்டுநராகப் பணியாற்றிய தனது பழைய நாட்களை நினைவுகூர்ந்தார்.

2016-ல் ஒரு ஷோவுக்காகப் போராடிய நிலை மாறி, இன்று 5,000-க்கும் மேற்பட்ட ஹவுஸ்ஃபுல் ஷோக்களைக் கண்டிருப்பது, தனது கடின உழைப்பு மற்றும் மக்களின் நம்பிக்கையால் மட்டுமே சாத்தியமானது என்று பெருமிதத்துடன் கூறினார்.

Rishab Shetty - Kantara Chapter 1
Rishab Shetty – Kantara Chapter 1

பணம் மற்றும் விருதுகளைத் தாண்டி, தான் பிறந்த மண்ணின் கதையை, உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள மக்களிடம் கொண்டு சேர்த்ததே தனது உண்மையான வெற்றி என்று அவர் நம்புகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *