• October 4, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா வந்திருக்கும் ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

அகமதாபாத்தில் நேற்று முன்தினம் (அக்டோபர் 2) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய பவுலர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சீட்டுக் கட்டு போல சரிந்தனர்.

முதல் நாளிலேயே 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் பேட்டிங்கில் ஏமாற்றம் தந்தாலும் மறுமுனையில் சீனியர் வீரர் கே.எல். ராகுல் பொறுப்புடன் ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார்.

அவருக்கு உறுதுணையாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் சுப்மன் கில்லும் 50 ரன்களில் அவுட்டாக அடுத்து இணைந்த துருவ் ஜூரெல் – துணைக் கேப்டன் ஜடேஜா கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்து.

கே.எல். ராகுல்
கே.எல். ராகுல்

துருவ் ஜூரெல் டெஸ்ட் கரியரில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்ய, இன்னொரு முனையில் ஜடேஜா டெஸ்டில் தனது ஆறாவது சதத்தை நிறைவுசெய்தார்.

இரண்டாவது நாள் முழுக்க ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் அடித்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

துருவ் ஜூரெல் - துணைக் கேப்டன் ஜடேஜா
துருவ் ஜூரெல் – துணைக் கேப்டன் ஜடேஜா

இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் பேட்ஸ்மேன்களை முதல் இன்னிங்ஸை போலவே அடுத்தடுத்து விக்கெட் எடுத்த இந்திய பவுலர்கள் அவர்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தினர்.

21 ஓவர்களிலேயே 46 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்புக்குச் சென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அடுத்த 25 ஓவர்களில் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆக, 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

சிராஜ்
சிராஜ்

இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 104* ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இப்போட்டியில் சிராஜ் (7 விக்கெட்டுகள்), ராகுல் (100), ஜூரெல் (125), ஜடேஜா (104*, 4 விக்கெட்டுகள்) ஆகிய நால்வர் இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *